வாக்குகள் எண்ணும் மையங்களில் கலெக்டர் லலிதா ஆய்வு
மயிலாடுதுறையில் வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
வாக்குகள் எண்ணப்பட்டன
மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. அதில் 19-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்னதாட்சி என்பவர் இறந்ததை அடுத்து அங்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக மயிலாடுதுறை நகராட்சியில் 35 வார்டுகளுக்கு மட்டுமே கடந்த 19-ந் தேதி தேர்தல் நடந்தது. மயிலாடுதுறை நகராட்சியில் பதிவான வாக்குகள் அனைத்தும் தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.
வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த கல்லூரி வளாகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று கல்லூரி அமைந்துள்ள தருமபுரம் சாலையில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்றனர். நேற்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து 9.30 மணிக்கு வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டன. 8 சுற்றுகளாக எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை மதியம் 2 மணிக்கு நிறைவடைந்தது.
தேர்தலின்போது 14 மற்றும் 32 ஆகிய வார்டுகளில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்கு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அங்கு மாற்று மின்னணு வாக்கு எந்திரம் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. இந்த 2 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மதியம் 2.30 மணி அளவில் 14 மற்றும் 32 ஆகிய வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது.
கலெக்டர் ஆய்வு
ஒவ்வொரு சுற்றின் போதும் வெற்றி பெற்றவர்களின் பெயர் மற்றும் பெற்ற வாக்குகளின் விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான பாலு அறிவித்தார். இந்த வாக்கு எண்ணும் பணியை பார்வையாளரும், உதவி கலெக்டருமான பாலாஜி கண்காணித்து வந்தார். நேற்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான லலிதா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதேபோல குத்தாலம், தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோவில், மணல்மேடு ஆகிய பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மயிலாடுதுறை டி.பி.டி.ஆர். தேசிய மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மதியம் 1 மணியளவில் நிறைவடைந்தது.
Related Tags :
Next Story