640 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி: ஓசூர் மாநகராட்சி கவுன்சிலரான சட்டக்கல்லூரி மாணவி-கண்காணிப்பு கேமரா கனவு திட்டம் என்கிறார்
ஓசூர் மாநகராட்சி தேர்தலில் இளம் வயது வேட்பாளரான சட்டக்கல்லூரி மாணவி யசஷ்வினி தி.மு.க சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராகி உள்ளார். இவர் வார்டு முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்துவதே தனது கனவு திட்டம் என்கிறார்.
ஓசூர்:
ஓசூர் மாநகராட்சி தேர்தலில் இளம் வயது வேட்பாளரான சட்டக்கல்லூரி மாணவி யசஷ்வினி தி.மு.க சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராகி உள்ளார். இவர் வார்டு முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்துவதே தனது கனவு திட்டம் என்கிறார்.
சட்டக்கல்லூரி மாணவி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி தேர்தலில், 13-வது வார்டில் தி.மு.க. சார்பில் யசஷ்வினி (வயது 22) என்ற சட்டக்கல்லூரி மாணவி போட்டியிட்டார். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் பி.ஏ.எல்.எல்.பி. 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருடைய கணவர் மோகன், தி.மு.க. உறுப்பினர் ஆவார். இவர் விவசாயம் மற்றும் ரோஜா சாகுபடி செய்து வருகிறார். இவர்கள், ஓசூர் கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.
தேர்தலில் 13-வது வார்டில் போட்டியிட்ட யசஷ்வினி 1,146 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் ரேவதி 506 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் அனிதா லட்சுமி 306 வாக்குகளும் பெற்றனர்.
640 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற யசஷ்வினி, வார்டு பகுதியின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன், அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி தருவேன் என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:-
எங்கள் வார்டு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால் நான் அரசியலுக்கு வரவில்லை. கடந்த ஆண்டு, மு.க.ஸ்டாலினின் அரசியல் நடவடிக்கையால் ஈர்க்கப்பட்டு, தி.மு.க. மாவட்ட மற்றும் மாநகர செயலாளர்கள் முன்னிலையில் எனது கணவரும், நானும் கட்சியில் இணைந்தோம். நான் பி.எஸ்சி. முடித்து விட்டு பி.ஏ. எல்.எல்.பி. சட்டப்படிப்பு படித்து கொண்டு இருக்கிறேன். இந்தநிலையில், மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுவை எனது பெயரில் கொடுத்தோம்.
கண்காணிப்பு கேமரா கனவு திட்டம்
தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கிய கட்சி தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு, கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். உள்ளாட்சியில் சிறப்பாக பணியாற்ற இளம் வயது வேட்பாளரான என் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெறச்செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். எனது கனவு திட்டம் என்றால் எனது வார்டு முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி குற்றங்கள் நிகழாத பகுதியாக மாற்ற பாடுபடுவேன். மொத்தத்தில் முழு நேர அரசியல் பணியாற்றி மக்களுக்கு சேவை செய்வதே எனது இலக்கு ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story