கர்நாடக மந்திரிகள்-எம்.எல்.ஏ.க்களின் சம்பள உயர்வுக்கான மசோதாக்கள் நிறைவேற்றம்


கர்நாடக மந்திரிகள்-எம்.எல்.ஏ.க்களின் சம்பள உயர்வுக்கான மசோதாக்கள் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 23 Feb 2022 2:26 AM IST (Updated: 23 Feb 2022 2:26 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபையில் கடும் அமளிக்கு இடையே மந்திரிகள்-எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு வழங்கும் வகையிலான 2 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

பெங்களூரு:

கவர்னர் உரை

  கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டத்தொடர் கடந்த 14-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. இந்த நிலையில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா, டெல்லி செங்கோட்டையில் காவி ஏற்றும் நாள் வரும் என்று கூறியதை கண்டித்தும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரி பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கடந்த 16-ந் தேதி முதல் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இருக்கைக்கு திரும்புங்கள்

  அதற்கு அடுத்த நாள் அதாவது 17-ந் தேதி முதல் அக்கட்சி உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தையும் மேற்கொண்டனர். இந்த நிலையில் கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரின் 7-வது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கியது.

  கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் 5-வது நாளாக தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்கள் சபாநாயகர் இருக்கையின் முன்பகுதிக்கு வந்து மந்திரி ஈசுவரப்பா மற்றும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

2 சட்ட மசோதாக்கள்

  அதைத்தொடர்ந்து கேள்வி நேரத்தை சபாநாயகர் அனுமதித்தார். காங்கிரசாரின் கடும் அமளிக்கு இடையே கேள்வி நேரம் நடத்தி முடிக்கப்பட்டது. ஜனதா தளம் (எஸ்) மற்றும் பா.ஜனதா உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட மந்திரிகள் பதிலளித்தனர். அதைத்தொடர்ந்து சட்டம் மற்றும் சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி, மந்திரிகளின் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தவும், எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தவும் தனித்தனியாக 2 சட்ட திருத்த மசோதாக்களை தாக்கல் செய்தார். அதற்கு ஒப்புதல் வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

  இந்த மசோதாக்கள் குறித்து பேசிய மாதுசாமி, ‘‘மந்திரிகள், சபாநாயகர் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு சம்பளம் உயர்வு வழங்கப்பட்டது. இனிமேல் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இயல்பாகவே உயர்த்தப்படும் வகையில் மசோதாவில் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. விலைவாசி உயர்வு குறியீட்டின்படி சம்பள உயர்வு வழங்கப்படும். இத்தகைய சம்பள உயர்வு முறையை மத்திய அரசு பின்பற்றுகிறது’’ என்றார்.

நிறைவேற்றம்

  இந்த 2 மசோதாக்களும் விவாதம் இன்றி கடும் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும்போது, காங்கிரஸ் உறுப்பினர்கள் குரலை உயர்த்தியும், கைகளை தட்டியும் கூச்சலிட்டனர்.

சம்பள உயர்வு விவரம் வருமாறு:-

சபாநாயகர்

  சபாநாயகர்-துணை சபாநாயகர், மேல்-சபை தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கு சம்பளம் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.70 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. அதுபோல் மருத்துவச்செலவு ஆண்டுக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

  வீட்டு வாடகை ரூ.80 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரமாகவும், வாகன பெட்ரோலிய பொருட்கள் 1,000 லிட்டரில் இருந்து 2 ஆயிரம் லிட்டராகவும், பயணப்படியாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.30-ல் இருந்து ரூ.40 ஆகவும், பகல் நேர பயண செலவு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாகவும்(ஒரு நாள்), வெளிமாநிலங்களுக்கு செல்லும் செலவு ரூ.7,500-ல் இருந்து ரூ.10 ஆயிரம் ஆக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர்

  அதுபோல் எதிர்க்கட்சி தலைவர்களுக்கான சம்பளம் ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாகவும், மருத்துவ செலவு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2½ லட்சமாகவும், வாகன எரிபொருள் பயன்பாடு 1000 லிட்டரில் இருந்து 2 ஆயிரம் லிட்டராகவும் உயர்த்தப்படுகிறது.

  பயணப்படி கிலோ மீட்டருக்கு ரூ.30-ஆகவும், பகல் நேர பயண செலவு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாகவும், வெளிமாநில பயண செலவு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாகவும் உயர்த்தப்படுகிறது.

எம்.எல்.ஏ.க்கள்

  மேலும் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சிக்களுக்கு சம்பளம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. கள ஊக்கத்தொகை ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாகவும், மருத்துவ செலவு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2½ லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய பயன்பாடு ஆயிரம் லிட்டரில் இருந்து 2 ஆயிரம் லிட்டராக உயர்த்தப்பட்டு உள்ளது.

  பயணப்படி கிலோ மீட்டருக்கு ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆகவும், பகல் நேர பயண கட்டணம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 ஆகவும், வெளிமாநில பயண கட்டணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

  இதுபோக அனைவருக்கும் மாதாந்திர தொலைபேசி கட்டணமாக ரூ.20 ஆயிரமும், உதவியாளர் மற்றும் ‘ரூம் பாய்’ கட்டணமாக ரூ.10 ஆயிரமும், சாப்பாட்டு செலவு ரூ.20 ஆயிரமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

Next Story