கர்நாடகத்தில் ஹிஜாப் அணிய தடை இல்லை - ஐகோர்ட்டில் மாநில அரசு வாதம்


கர்நாடகத்தில் ஹிஜாப் அணிய தடை இல்லை - ஐகோர்ட்டில் மாநில அரசு வாதம்
x
தினத்தந்தி 23 Feb 2022 2:28 AM IST (Updated: 23 Feb 2022 2:28 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஹிஜாப் அணிய தடை இல்லை என்று கர்நாடக ஐகோர்ட்டில் மாநில அரசு கூறியுள்ளது.

பெங்களூரு:

மத அடையாள ஆடைகள்

  உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அக்கல்லூரி நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டது. இதை கண்டித்து அந்த மாணவிகள் போராட்டம் நடத்தினர். மேலும் கர்நாடக அரசு மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்றும், பிற ஆடைகளை அணியக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

  கர்நாடக அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்து, ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிடுமாறு கோரினர். இந்த மனுக்கள் மீது ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி மற்றும் நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்டு, மாணவர்கள் மத அடையாள ஆடைகளை அணிந்து வர தடை விதித்தது.

தடை இல்லை

  இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று 8-வது நாளாக விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் அந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றபோது கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது:-
  
ஹிஜாப் அணியும் உரிமை அரசியல் சாசனத்தின் 19 (1) (ஏ) பிரிவின் கீழ் வருகிறது. இது பிரிவு 25-ன் கீழ் வருவது இல்லை. ஒருவர் ஹிஜாப் அணிய விரும்பினால், அவர் அதை அணிந்து கொள்ளலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் சில நிறுவன கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. ஹிஜாப் அணிய உரிமை உள்ளதாக மனுதாரர்கள் வாதிட்டனர். ஆனால் அது அரசியல் சாசனம் 19 (2)-வுக்கு தொடர்பு உடையது.

கட்டுப்பாடுகளை விதித்துள்ளது

  அந்த பிரிவின்படி மாநில அரசு, நிறுவன ஒழுங்குமுறை விதிகளின்படி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த விதிமுறை வகுப்பறைக்குள் மட்டுமே பொருந்தும். இது மற்ற இடங்களுக்கு பொருந்தாது. வகுப்பறையில் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பெரிய சிக்கலானது. ஏனென்றால் முஸ்லிம் சமூகத்தில் ஹிஜாப் அணிய வேண்டும் என்று சிலர் வற்புறுத்துகிறார்கள். இல்லாவிட்டால் சமூகத்தை விட்டு நீக்குவதாக மிரட்டுகிறார்கள்.

  அரசியல் சாசனத்தில் 19 (1) (ஏ) பிரிவு கருத்து சுதந்திரத்துடன் தொடர்பு உடையது. அட்டவணை 19 (2)-ன்படி கர்நாடக அரசு புதிய சட்டத்தை இயற்ற எந்த தடையும் இல்லை. மாநில அரசுக்கு உள்ள சட்ட அதிகாரத்தின்படி இறையாண்மை மற்றும் ஒற்றுமை, மாநிலத்தின் பாதுகாப்பு, பொது அமைதி, ஒழுங்குநிலையை ஏற்படுத்துதல், குற்றம் புரிய தூண்டிவிடுதலை தடுத்தல் போன்றவற்றுக்காக சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
  இவ்வாறு பிரபுலிங்க நாவதகி கூறினார்.


Next Story