பஜ்ரங்தள பிரமுகர் கொலை வழக்கில் 7 பேர் கைது


பஜ்ரங்தள பிரமுகர் கொலை வழக்கில் 7 பேர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2022 2:42 AM IST (Updated: 23 Feb 2022 2:42 AM IST)
t-max-icont-min-icon

பஜ்ரங்தள பிரமுகர் கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், சிவமொக்காவில் சகஜ நிலை திரும்புவதாகவும் கூடுதல் டி.ஜி.பி. பிரதாப் ரெட்டி கூறினார்.

சிவமொக்கா:

பஜ்ரங்தள பிரமுகர் படுகொலை

  சிவமொக்கா மாவட்டம் சீகேஹட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷா(வயது 28). இவர் பஜ்ரங்தள பிரமுகர் ஆவார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரை மர்ம நபர்கள் படுகொலை செய்தனர். இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் சிவமொக்கா டவுன் புத்த நகரைச் சேர்ந்த காசிப்(வயது 30), ஜே.பி.நகரைச் சேர்ந்த சையது சையது நதீம்(20), ஆசிப், ரிஹான், அப்னான், கிளர்க்பேட்டையைச் சேர்ந்த ஜிலானி, சிக்கு ஆகியோர் ஆவர்.

  இதுதவிர மேலும் 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்ட ஹர்ஷாவின் இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது பயங்கர வன்முறை வெடித்ததால் சிவமொக்காவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொடி அணிவகுப்பு

  நேற்று காலை முதல் சிவமொக்கா டவுனில் உள்ள முக்கியமான வீதிகளில் சிறப்பு அதிரடி படையினரின் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

  மேலும் சிவமொக்கா டவுனில் மாவட்ட சிறப்பு காவல் படை, அதிவிரைவுப் படை, கர்நாடக ரிசர்வ் போலீஸ் படை, ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதனால் சிவமொக்கா டவுனில் எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை. சகஜ நிலை திரும்பி வருகிறது.

ஆட்டோக்களுக்கு தீவைப்பு

  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் சிவமொக்கா டவுன் திப்பு நகர் கோபாலா குறவர் தெருவில் யாரோ மர்ம நபர்கள் 2 ஆட்டோக்களுக்கு தீவைத்து எரித்திருந்தனர். மேலும் அங்குள்ள ஒரு மோட்டார் சைக்கிளுக்கும் மர்ம நபர்கள் தீவைத்து எரித்திருந்தனர். இதுபற்றி துங்கா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

  இந்த நிலையில் ஹர்ஷா கொலை வழக்கில் கைதானவர்கள் குறித்தும், இவ்வழக்கில் நடைபெற்று வரும் விசாரணையின் நிலை குறித்து நேற்று சிவமொக்காவில் கூடுதல் டி.ஜி.பி. பிரதாப் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண் போலீஸ் காயம்

  ஹர்ஷா கொலை வழக்கில் ஏற்கனவே 3 பேரை கைது செய்திருந்தோம். தற்போது மேலும் 4 பேரை கைது செய்திருக்கிறோம். இந்த கொலை சம்பவத்தில் மொத்தம் 7 பேர் ஈடுபட்டனர். அவர்கள் காரில் வந்து கொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதானவர்களில் சிலருக்கு அரசியல் பிரமுகர்கள், முக்கிய நபர்களுடன் தொடர்பு உள்ளது தெரியவந்திருக்கிறது. இதுதவிர மேலும் 12 பேரை பிடித்து விசாரணை வளையத்தில் வைத்துள்ளோம். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கைதானவர்களின் பின்புலம் உள்பட அனைத்து விவரங்கள் குறித்தும் சேகரித்து வருகிறோம்.

  இறுதி ஊர்வலத்தின்போது நடந்த வன்முறையிலும், கல்வீச்சு சம்பவத்திலும் 25 பேர் காயம் அடைந்தனர். அதில் ஒரு பெண் போலீசும் அடங்குவார். வன்முறை கட்டுக்கடங்காமல் போனதால் கண்ணீர்புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் வன்முறையை கட்டுப்படுத்தினோம்.

144 தடை உத்தரவு

  வன்முறை மற்றும் கல்வீச்சு சம்பவம் தொடர்பாக கிடைத்த வீடியோக்களின் அடிப்படையில் விஷமிகளை கண்டறிந்து கைது செய்து வருகிறோம். மொத்தம் 14 இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் 3 சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளோம்.

  சிவமொக்காவில் தற்போது சகஜ நிலை திரும்புகிறது. இதனால் 144 தடை உத்தரவை நீட்டிப்பது குறித்து கலெக்டர் செல்வமணி அறிவிப்பார்.
  இவ்வாறு அவர் கூறினார்.

என்.ஐ.ஏ. விசாரணைக்கு கோரிக்கை

ஹர்ஷா கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பா.ஜனதா மந்திரியான ஈசுவரப்பா, மத்திய மந்திரி ஷோபா ஆகியோர் தெரிவித்து வருகிறார்கள். மேலும் மந்திரி ஈசுவரப்பா ‘முசல்மான் கூண்டாஸ்’(முஸ்லிம் குண்டர்கள்) ஹர்ஷாவின் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பார்கள் என்று கூறியுள்ளார். பா.ஜனதாவின் தேசிய பொது செயலாளரான பி.எல்.சந்தோஷ் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக முஸ்லிம் அமைப்பினர் ஹர்ஷாவை கொலை செய்திருக்கலாம் என்று கூறி வருகிறார். அவர்கள் இதுபற்றி போலீஸ் துறையிடம் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story