‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும் குழியுமான சாலை
மதுரை மாவட்டம் திருமால் பஞ்சாயத்து புதுப்பட்டி கிராமத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.சாலையில் தினமும் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.
ராமர், திருமால்.
தேவையின்றி எரியும் மின்விளக்குகள்
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் காலை நேரத்தில் நீண்ட நேரம் மின்விளக்குகள் எரிகின்றது. இதனால் மின்சாரம் வீணாக்கப்படுகிறது. மின்சார சிக்கனத்தை கருத்தில் கொண்டு அதிகாரிகள் தேவையின்றி எரியும் மின்விளக்கு எரிவதை தடுக்க வேண்டும்.
சிவா, மதுரை.
சுகாதார சீர்கேடு
ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் மூக்கை மூடி செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு அடைந்து நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
அட்டவணை வேண்டும்
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் பஸ் அட்டவணை இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் பயணிகள் எந்த பஸ் முதலில் புறப்படும் என அறியமுடியாமல் நிற்கும் அனைத்து பஸ்களிலும் ஏறி இறங்குகின்றனர். இதனால் நேரவிரயம் ஏற்படுகிறது. நோயாளிகளும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் சரியான நேரத்திற்கு மருத்துவமனை மற்றும் கல்வி நிலையங்களுக்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுத்து பெரியார் பஸ் நிலையத்தில் அட்டவணையை அமைக்க வேண்டும்.
உமாகந்தன், ஹெச்.எம்.எஸ்.காலனி.
தேங்கிய குப்பை
மதுரை பழைய நத்தம் ரோடு 47-வது வார்டு தனியார் பள்ளி எதிரே குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றது. இந்த குப்பை குவியலில் எலிகள், பாம்புகள் போன்ற விஷஜந்துகள் நாடமாடுகின்றது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் இதனை கடக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள குப்பை குவியலை அகற்ற வேண்டும்.
முரளிதரன், மதுரை.
பழுதடைந்த மேம்பால சாலை
மதுரை அண்ணாநகர்-தெப்பக்குளம் மேம்பால சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த பாலத்தில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். விபத்து அபாயம் உள்ள இந்த மேம்பால சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேஷ், மதுரை.
Related Tags :
Next Story