மனைவியுடன், நகை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனைவியுடன், நகை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கும்பகோணம்:-
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனைவியுடன், நகை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நகை தொழிலாளி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நாணயக்கார தெருவை சேர்ந்தவர் மோகன்(வயது 55). நகை தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி ஜெயசுதா(49). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 15 ஆண்டுகளாக மோகன் நகை தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மோகன் சிரமப்பட்டு வந்தார்.
இதன் காரணமாக குடும்ப செலவிற்கு நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளார். கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாத நிலையில் மோகனும், ஜெய சுதாவும் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டனர்.
தூக்கில் தொங்கினர்
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் கும்பகோணம் மோதிலால் தெருவைச் சேர்ந்த மோகனின் நண்பர்கள் 2 பேர் மோகன் வீட்டுக்கு வந்துள்ளனர். வீட்டு வாசலில் இருந்து 2 பேரும் மோகனை பெயர்சொல்லி கதவை திறக்குமாறு அழைத்துள்ளனர். வெகுநேரமாகியும் மோகன் வீட்டு கதவு திறக்காததன் காரணமாக சந்தேகமடைந்த மோகனின் நண்பர்கள் வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி கும்பகோணம் கிழக்கு போலீசில் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து விரைந்து வந்த இன்ஸ்பெக்டர்கள் அழகேசன், மகாலட்சுமி மற்றும் போலீசார் கதவை திறந்து பார்த்தபோது மோகன் மற்றும் அவருடைய மனைவி ஜெயசுதா ஆகிய இருவரும் புடவையால் ஒரே அறையில் தூக்கில் பிணமாக தொங்குவது தெரிய வந்தது.
தொழிலில் நஷ்டத்தால் தற்கொலை
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் மோகன் வீட்டருகே வசித்தவர்கள் சம்பவம் குறித்து மோகனின் சகோதரி சுமித்ராவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சுமித்ரா தூக்கில் தொங்கிய அண்ணன்- அண்ணி இருவரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதார்.
பின்னர் நடந்த சம்பவம் குறித்து சுமித்ரா கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கணவன்-மனைவி இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோகம்
கும்பகோணத்தில் நகை தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் நகை தொழிலாளி மனைவியுடன் ஒரே அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story