அரியலூர் மாணவி தற்கொலை: பெற்றோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை


அரியலூர் மாணவி தற்கொலை: பெற்றோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 23 Feb 2022 3:09 AM IST (Updated: 23 Feb 2022 3:09 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாணவி தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து அவரது பெற்றோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கீழப்பழுவூர்:

மாணவி தற்கொலை
அரியலூர் மாவட்டம், வடுகபாளையத்தை சேர்ந்தவரான லாவண்யா(வயது 17), தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த மாதம் பூச்சி மருந்து(விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து, விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்தனர். அவர், ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இதற்கிடையே பள்ளி நிர்வாகிகள் மதம் மாற வற்புறுத்தியதால்தான், தன் மகள் தற்கொலை செய்ததாக லாவண்யாவின் தந்தை முருகானந்தம் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த கோர்ட்டு, மாணவி தற்கொலை வழக்கை, சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள், மாணவி தற்கொலை விவகாரத்தில், 18 வயதுக்கு கீழ் உள்ளவரை தற்கொலைக்கு தூண்டுதல் உள்பட நான்கு சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணை
மேலும் சி.பி.ஐ. இணை இயக்குனர் வித்யா குல்கர்னி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம், மாணவி படித்த மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி மற்றும் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. துணை சூப்பிரண்டுகள் ரவி, சந்தோஷ், இன்ஸ்பெக்டர் சுமதி உள்ளிட்டோர் கொண்ட 6 பேர் குழுவினர், நேற்று காலை 10 மணியளவில், வடுகபாளையம் கிராமத்துக்கு வந்தனர். அங்கு மாணவியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஆகியோரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

Next Story