16 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை
சேலம் மாவட்டத்தில் 16 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
சேலம், பிப்:-
சேலம் மாவட்டத்தில் 16 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
ஓட்டு எண்ணிக்கை
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான சேலம் மாநகராட்சி, ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி, நரசிங்கபுரம், இடங்கணசாலை, தாரமங்கலம் ஆகிய 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகள் என 695 வார்டுகளுக்கு 1,514 வாக்குச்சாவடிகளில் கடந்த 19-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் 70.54 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இதையடுத்து தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்டத்தில் 16 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
சான்றிதழ்
சேலம் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் சேலம் அம்மாபேட்டை சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட்டன. மாநகராட்சியில் உள்ள அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட வார்டுகள் அடிப்படையில் 8 அறைகளில் ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு அறை முன்பும் போலீஸ் உதவி கமிஷனர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
வாக்கு எண்ணும் மையத்தில் 6 மேஜைகள் அமைக்கப்பட்டு அதில் 2 பேர் பணியில் ஈடுபட்டனர். அரசியல் கட்சிகளின் முகவர்கள் அறையில் சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து ஒவ்வொரு வார்டின் முடிவுகளும் அறிவிக்கப்பட்ட பின்னர் அடுத்த வார்டு எண்ணப்பட்டன. மேலும் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கிறிஸ்துராஜ் வெற்றிக்கான சான்றிதழ் வழங்கினார்.
ஆய்வு
ஓட்டு எண்ணிக்கை பணியை தேர்தல் பாவையாளர் அண்ணாதுரை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்மேகம் அடிக்கடி பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எண்ண்ப்பட்டன.
ஒவ்வொரு வார்டாக எண்ணப்பட்டு வெற்றி அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினர். மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story