பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சுயேச்சை வேட்பாளர்


பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சுயேச்சை வேட்பாளர்
x
தினத்தந்தி 23 Feb 2022 12:20 PM IST (Updated: 23 Feb 2022 12:20 PM IST)
t-max-icont-min-icon

திருப்பாச்சூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சுயேச்சை வேட்பாளரால் பரபரப்பு ஏற்படட்து.

சென்னை,

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் உள்ள திருமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வந்தது.

காலை முதல் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திருவள்ளூர் நகராட்சியின் கடைசி வார்டான 27-வது வார்டுக்கான வாக்கு எண்ணும் பணி மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. அப்போது வாக்கு எண்ணும் மையத்திலேயே சுயேச்சை வேட்பாளரான சேகர் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை திடீரென குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு அவரிடமிருந்த பூச்சி மருந்து பாட்டிலை பறித்து அவரை குண்டுக்கட்டாக தூக்கி வந்தனர்.

அவரிடம் விசாரித்ததில், 27-வது வார்டில் கள்ள ஓட்டுகள் அதிகமாக போடப்பட்டு உள்ளதால் அங்கு தேர்தலை நிறுத்தி விட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் என கலெக்டரிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து போலீசார் அவரை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மற்றொரு சுயேச்சை வேட்பாளரான மோகன்ராஜ் என்பவரும் 27-வது வார்டில் பணப்பட்டுவாடா அதிகமாக செய்துள்ளதால் அங்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே வந்து தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இச்சம்பவத்தால் நேற்று வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story