தூத்துக்குடி மாநகராட்சியில் வருகிற 2-ம் தேதி புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு
தூத்துக்குடி மாநகராட்சியில் வருகிற 2ம் தேதி புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியில் வார்டு தேர்தலில் போட்டியிட்ட 320 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளதாகவும், வருகிற 2-ந் தேதி புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுவதாகவும் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ கூறினார்.
உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் உள்ள 396 வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டு இருந்த 9 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைத்து நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வருகிற 2-ந் தேதி அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் பதவியேற்கின்றனர். தொடர்ந்து 4-ந் தேதி காலை அந்தந்த உள்ளாட்சி தலைவருக்கான தேர்தலும், மதியம் துணைத்தலைவருக்கான தேர்தலும் நடக்கிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வருகிற 2-ந் தேதி நடக்கிறது. 4-ந் தேதி மேயர், துணை மேயர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
டெபாசிட் இழப்பு
இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ நிருபர்களிடம் கூறும் போது, தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 443 பேர் போட்டியிட்டனர். இதில் 60 பேர் வெற்றி பெற்றனர்.
மேலும் போட்டியிட்டவர்களில் 320 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்து உள்ளனர். வெற்றி பெற்ற புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி வருகிற 2-ந் தேதி மாநகராட்சி கூட்ட அரங்கில் நடக்கிறது. வெற்றி சான்றிதழ் வழங்கிய போது, பதவியேற்புக்கான அழைப்பும் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேயர் தேர்தல்
4-ந்தேதி காலை 9.20 மணிக்கு மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடக்கிறது. போட்டி இருந்தால் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து, வாக்குப்பதிவு நடைபெறும். மதியம் 2.30 மணிக்கு துணை மேயர் பதவிக்கான தேர்தலும் நடைபெறும். அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு மேயர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்பு விழா நடத்தப்படும். மேயர் தேர்தலை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.
Related Tags :
Next Story