பாஜக போட்டியிட்ட 15 இடங்களில் டெபாசிட் இழப்பு


பாஜக போட்டியிட்ட 15 இடங்களில் டெபாசிட் இழப்பு
x
தினத்தந்தி 23 Feb 2022 9:03 PM IST (Updated: 23 Feb 2022 9:03 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சியில் பா.ஜ.க. போட்டியிட்ட 15 இடங்களிலும் டெபாசிட் இழந்தது. நீலகிரியில் 592 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

ஊட்டி

ஊட்டி நகராட்சியில் பா.ஜ.க. போட்டியிட்ட 15 இடங்களிலும் டெபாசிட் இழந்தது. நீலகிரியில் 592 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

தேர்தல் முடிவுகள்

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 108 வார்டுகள், 11 பேரூராட்சி களில் 186 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது. நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

நீலகிரியில் மொத்தம் 294 வார்டுகளில் 1,253 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முடிவில் தி.மு.க. 171 இடங்கள், காங்கிரஸ் 28 இடங்கள், அ.தி.மு.க. 42 இடங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 6 இடங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 இடங்கள், முஸ்லிம் லீக் 3 இடங்கள், பா.ஜ.க. 5 இடங்கள், சுயேச்சைகள் 36 பேர் வெற்றி பெற்றனர். 

ஊட்டி நகராட்சி

ஊட்டி நகராட்சியில் 36 இடங்களுக்கு 198 பேர் போட்டியிட்டனர். இதில் 119 பேர் டெபாசிட் இழந்தனர். அதன் விவரம் வருமாறு:- ஊட்டி நகராட்சியில் அ.தி.மு.க. 10 வார்டுகள், பா.ஜ.க. 15 வார்டுகள், நாம் தமிழர் கட்சி 7 வார்டுகள், பா.ம.க. 4 வார்டுகள், அ.ம.மு.க. 3 வார்டுகள், எஸ்.டி.பி.ஐ. 2 வார்டுகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 78 பேர் வைப்புத்தொகை இழந்தனர். 8-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் டெபாசிட் இழந்தார். ஊட்டி நகராட்சியில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்ட 15 இடங்களிலும் டெபாசிட் இழந்தது.

டெபாசிட் இழப்பு

அதேபோல் குன்னூர் நகராட்சியில் 79 பேர், கூடலூர் நகராட்சியில் 66 பேர், நெல்லியாளம் நகராட்சியில் 38 பேர் என மொத்தம் 4 நகராட்சிகளில் அரசியல் கட்சி, சுயேச்சை என 302 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்து உள்ளனர்.

 அதேபோல் அதிகரட்டி பேரூராட்சியில் 20 பேர், உலிக்கல் பேரூராட்சியில் 29 பேர், ஓவேலி பேரூராட்சியில் 23 பேர், கீழ்குந்தா பேரூராட்சியில் 18 பேர், கேத்தி பேரூராட்சியில் 30 பேர், கோத்தகிரி பேரூராட்சியில் 70 பேர், சோலூர் பேரூராட்சியில் 15 பேர், தேவர்சோலை பேரூராட்சியில் 31 பேர், நடுவட்டம் பேரூராட்சியில் 10 பேர், பிக்கட்டி பேரூராட்சியில் 14 பேர், ஜெகதளா பேரூராட்சியில் 30 பேர் என அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 290 பேர் டெபாசிட் இழந்தனர். நீலகிரியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 592 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்து உள்ளனர்.


Next Story