காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திடீர் ஆய்வு
தமிழ்நாடு மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் உத்தரவின்படி திருவாரூர் மாவட்டம் முழுவதும் காலாவதியான குளிர்பானங்கள், உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு செய்தனர். இதன் ஒரு பகுதியாக திருவாரூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சவுமியா சுந்தரி தலைமையில் திருவாரூர் நகர உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் உள்ளிட்டோர் குளிர்பான கடைகள், குடிநீர், உணவகங்கள், டீ கடைகள், மற்றும் சாலையோர கடைகளில் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சவுமியா சுந்தரி கூறியதாவது:-
அனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் உரிமம் பெற வேண்டும். கோடை காலம் வர இருப்பதால் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் தரமான தயாரிப்பு பொருட்கள் கொண்டு குளிர்பானங்களை தயாரிக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் குடிநீரின் தரத்தினை நீர் பகுப்பாய்வு சான்றிதழ் பெற வேண்டும்.
ரசீதுகள் வைத்திருக்க வேண்டும்
காலாவதியான குளிர்பானங்களை விற்கவோ, இருப்பு வைத்திருக்கவோ கூடாது. விற்பனையாளர்கள் தாங்கள் கொள்முதல் செய்யும் குளிர்பானங்களின் காலாவதி தேதியினை உறுதி செய்ய வேண்டும். வெளிமாவட்டங்களிலிருந்து வாங்கும் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்களுக்கு உரிய விலை ரசீதுகள் வைத்திருக்க வேண்டும். காலாவதியான குளிர்பானங்கள், உணவு பொருட்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள் வாங்கும் போது உணவு பாதுகாப்பு துறை லைசென்ஸ் எண், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை பொதுமக்கள் சரிபார்த்து வாங்க வேண்டும்.
புகார் தெரிவிக்கலாம்
உணவகங்கள் மற்றும் சாலையோர கடைகள் உணவு தயாரிக்க பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்த கூடாது. சாலையோர உணவகங்களில் உணவு பொருட்களை மூடி வைக்க வேண்டும். பார்சல் செய்யும் பைகளை எச்சில் தொட்டோ, வாயினால் ஊதி பிரிக்கவோ கூடாது. தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை பயன்படுத்த கூடாது. இதனை மீறினால் அபராதம் விதிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது மக்கள் உணவு பொருட்கள் பற்றிய புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
---
Related Tags :
Next Story