நிலுவை தொகை கேட்டு கரும்பு விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்


நிலுவை தொகை கேட்டு கரும்பு விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2022 9:10 PM IST (Updated: 23 Feb 2022 9:10 PM IST)
t-max-icont-min-icon

தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் பாக்கி வைத்துள்ள நிலுவை தொகையை வழங்க நடவிக்கை எடுக்கக்கோரி கரும்பு விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை 
தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் பாக்கி வைத்துள்ள நிலுவை தொகையை வழங்க நடவிக்கை எடுக்கக்கோரி கரும்பு விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாக்கி தொகை

திருவண்ணாமலை அருகே மலப்பாம்பாடியில் 18 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் சர்க்கரை ஆலை ெசயல்பட்டது. இந்த ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் அதற்கான தொகையை பல விவசாயிகளுக்கு வழங்காமல் பாக்கி வைத்துள்ளது. இதனை வழங்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தியும் இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நிலுவை பாக்கித்தொகை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது. 

தீர்வுகாண வேண்டும்

போராட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ஏ.வி.ஸ்டாலின் மணி, மாநில துணைத் தலைவர் எஸ்.பலராமன், சி.பி.எம். மாவட்டக்குழு எம்.வீரபத்திரன், சட்ட ஆலோசகர் எஸ்.அபிராமன் மற்றும் டி.கே.வெங்கடேசன், எம்.பிரகலாதன், இரா.பாரி, எம்.சிவக்குமார், வேல்மாறன், எஸ்.ராமதாஸ் உள்பட சங்க நிர்வாகிகள் மற்றும் கரும்பு விவசாயிகள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

அப்போது. 18 வருடங்களுக்கு முன்பு தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு ரூ.11 கோடி கரும்பு பணம் பாக்கி கேட்டும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேசிடம் மனு அளித்தனர். 
கலெக்டரிடம் மனு

அதேபோல் ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு நிலுவை பாக்கி தொகை வழங்க அமைதி கூட்டம் நடத்தி தீர்வு காண வேண்டுமென கரும்பு உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் ஆர்த்தீஸ்வரி ஆர்.ராஜேந்திரன்  கலெக்டர் முருகேஷை நேற்று நேரில் சந்தித்து முறையிட்டார்.

Next Story