வாகனத்தில் இருந்து இறங்கி சென்று யானையின் முன்பு அமர்ந்து கும்பிட்ட நபர்
தமிழக கர்நாடக எல்லையான காரப்பள்ளம் அருகே வாகனத்தில் இருந்து இறங்கி சென்று காட்டு யானையின் முன்பு அமர்ந்து ஒருவர் கும்பிட்டார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக கர்நாடக எல்லையான காரப்பள்ளம் அருகே வாகனத்தில் இருந்து இறங்கி சென்று காட்டு யானையின் முன்பு அமர்ந்து ஒருவர் கும்பிட்டார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மலைக்கிராமங்கள்
பொதுவாக பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். அதேபோல் வனப்பகுதி சாலைகளில் கூட்டமாக வரும் யானைகளை கண்டாலே சாலைகளில் வாகனங்களில் வருபவர்கள், நடந்து செல்வோர் அச்சம் அடைவார்கள். யானைகள் மனிதர்களை கண்டாலே துரத்திச்செல்லும்.
யானைகளிடம் யாராவது சிக்கிக்கொண்டால் துதிக்கையால் பிடித்து காலால் மிதித்து கொன்றுவிடும். இதுபோன்ற சம்பவங்கள் வனப்பகுதியையொட்டிய மலைக்கிராமங்களில் அடிக்கடி நடந்து வருவது வழக்கம்.
இரவுநேர போக்குவரத்துக்கு தடை
இந்தநிலையில் ஆசனூர் அருகே காட்டுயானையின் அருகில் சென்று கும்பிட்ட நபரை ஒன்றும் செய்யாமல் யானை காட்டுக்குள் தானாக சென்று விட்டது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
வனப்பகுதி வழியாக வாகனங்கள் செல்லும்போது அதில் அடிபட்டு வனவிலங்குகள் இறப்பதை தடுக்கும் விதமாக திம்பம் மலைப்பாதையில் கடந்த 10-ந் தேதி முதல் மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை நேரங்களில் பண்ணாரி சோதனை சாவடியிலும், காரப்பள்ளம் சோதனை சாவடியிலும் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நிற்கின்றன.
யானையின் அருகில் சென்ற நபர்
அதேபோல் ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே நேற்று காலை தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது கர்நாடக வனப்பகுதியில் உள்ள ரோட்டோரத்தில் ஆண் யானை ஒன்று நின்று கொண்டு இருந்தது. பெரிய தந்தங்களுடன் அந்த யானை காணப்பட்டது.
இதைப்பார்த்த பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் யானையை தங்கள் செல்போனில் படம் எடுத்தும், வீடியோ பதிவும் செய்தனர். அப்போது ஏதோ ஒரு வாகனத்தில் இருந்து இறங்கிய 40 வயது மதிக்கத்தக்க நபர் கையில் தண்ணீர் பாட்டிலுடன் யானையை நோக்கி சென்றார். இதை பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் அவரை பார்த்து, யானை அருகே செல்ல வேண்டாம் என்று கூச்சலிட்டார்கள். ஆனால் அந்த நபர் அதை கண்டுகொள்ளவில்லை.
விரட்ட முயன்றார்
யானை முன்பு சென்ற அந்த நபர் அதன் முன்பு உட்கார்ந்து கும்பிட்டார். பின்னர் கீழே படுத்து வணங்கினார். அதன்பின்னர் எழுந்து யானையை விரட்ட முயன்றார்.
இதனால் யானை பின்னோக்கி சென்றது. திடீரென ஆவேசமடைந்த யானை அந்த நபரை நோக்கி வேகமாக ஓடி வந்தது. ஆனாலும் அந்த நபர் அசரவில்லை. அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கேயே நின்றிருந்தார்.
தானாக காட்டுக்குள் சென்றது
யானை அவரது மிக அருகில் வந்து நின்றது. சிறிது நேரம் அவர் அருகிலேயே நின்று கொண்டு இருந்தது. ஆனால் அவரை எதுவும் செய்யவில்லை. பின்னர் திரும்பி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
பின்னர் அந்த நபர் ரோட்டுக்கு வந்துவிட்டார். அவர் யானையின் அருகில் சென்ற காட்சிகளை அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்தனர்.
பரபரப்பு
அந்த நபர் யார்?, மனநிலை பாதிக்கப்பட்டவரா? அல்லது குடிபோதையில் அப்படி நடந்து கொண்டாரா? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் நின்றிருந்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Related Tags :
Next Story