விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் 2வது நாளாக உண்ணாவிரதம்


விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் 2வது நாளாக உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 23 Feb 2022 10:02 PM IST (Updated: 23 Feb 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் 2வது நாளாக உண்ணாவிரதம்

பல்லடம்,
விசைத்தறி கூலி உயர்வை ஒப்பந்த வடிவில் அமல்படுத்தக்கோரி பல்லடம் அருகே, விசைத்தறி உரிமையாளர்கள் தங்களது குடும்பத்துடன் 2-வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தனர்.
உண்ணாவிரதம் 
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையில் கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத்தின் சார்பில் கூலி உயர்வை ஒப்பந்த வடிவில் அமல்படுத்தக்கோரி கடந்த  21-ந் தேதி  முதல் 5 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் காரணம்பேட்டையில் நடத்தப்படும் என்று திருப்பூர்  மாவட்ட விசைத்தறியாளர்கள் அறிவித்து இருந்தனர். 
அதன்படி 21-ந் தேதி  காரணம்பேட்டையில் விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுனர். ஆனால்  22-ந் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதால் போலீசார் உண்ணாவிரதத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று மீண்டும் 2 வது நாளாக விசைத்தறியாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குடும்பத்துடன் ஈடுபட்டுள்ளனர். 
இந்த போராட்டம் குறித்து  கோவை திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
 கடந்த 16-ந் தேதி அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்லடம் ரகத்துக்கு 15 சதவீதம்,  சோமனூர் ரகத்துக்கு  19 சதவீதம் கூலி உயர்வு என்ற ஒப்பந்தத்தை ஏற்று, பல்லடம், மங்கலம், வேலம்பாளையம், கண்ணம்பாளையம் சங்கங்கள்  போராட்டத்தை திரும்ப பெற்றன. 
கடையடைப்பு 
பேச்சுவார்த்தைக்கு எங்களை அழைக்கவில்லை என்றும், ஒப்பந்தம் வாய்மொழியாக இல்லாமல், கையெழுத்து வடிவில் ஒப்பந்தம் இருந்தால் மட்டுமே போராட்டம் வாபஸ் பெறுவோம் என சோமனுார் சங்கம் அறிவித்தது.
இதேபோல், அவினாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லுார் சங்கங்களும், சோமனுார் சங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவித்தன.   எனவே, கையெழுத்து வடிவில் ஒப்பந்தத்தை வழங்க வேண்டும்.இந்த உண்ணாவிரத போராட்டம்  25-ந் தேதி வரை நடைபெறும். மேலும்  25-ந் தேதி  காரணம்பேட்டை, சோமனூர், சாமளாபுரம், கருமத்தம்பட்டி, உள்ளிட்ட இடங்களில் கடையடைப்பு நடத்தவும் ஆதரவு கேட்டுள்ளோம். இவ்வாறு விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story