புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் இன்று மறுவாக்குப்பதிவு


புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் இன்று மறுவாக்குப்பதிவு
x
தினத்தந்தி 23 Feb 2022 10:10 PM IST (Updated: 23 Feb 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் இன்று (வியாழக்கிழமை) மறுவாக்குப்பதிவு நடக்கிறது. மேலும் உடனே வாக்குகள் எண்ணி, முடிவு அறிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடலூர், 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் புவனகிரி பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கான பதவிகளுக்கு 78 பேர் போட்டியிட்டனர். 

வாக்குப்பதிவு முடிந்தவும், அன்று இரவு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும், வாக்கு எண்ணிக்கை மையமான புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டது. 
இதையடுத்து நேற்று முன்தினம், புவனகிரி பேரூராட்சியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

எந்திரம் பழுது

அப்போது 4-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 4-ல் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் திடீரென பழுதானது. பின்னர் பெல் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் சரிபார்த்தும், அதனை சரிசெய்ய முடியவில்லை. இதனால் 4-வது வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டு திருவள்ளுவர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி எண் 4-ல், 24-ந் தேதி (அதாவது இன்று) மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

அதன்படி இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் கொரோனா அறிகுறி உள்ளவர்கள், அதற்கான சான்றிதழை அளித்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

பலத்த பாதுகாப்பு

பின்னர் வாக்குப்பதிவு முடிந்ததும், அதே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து வாக்கு எண்ணிக்கை தொடங்கி, தேர்தல் முடிவு உடனே அறிவிக்கப்பட உள்ளது. இந்த பணியில் தேர்தல் நடத்தும் அலுவலரும், புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலருமான அருள்குமார் மேற்பார்வையில் 15 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

மறுவாக்குப்பதிவையொட்டி வாக்குப்பதிவு மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவித சம்பவம் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ்ராஜ், சுந்தரம் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மறுவாக்குப்பதிவு நடைபெறுவதால் புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டு பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.
கடந்த 19-ந்தேதி நடைபெற்ற தேர்தலில் 1170 வாக்காளர்களை கொண்ட இந்த வார்டில் 927 வாக்காளர்கள் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story