மாரண்டஅள்ளி அருகே விவசாயி சரமாரி வெட்டிக்கொலை சொத்து தகராறில் மகன் வெறிச்செயல்


மாரண்டஅள்ளி அருகே விவசாயி சரமாரி வெட்டிக்கொலை சொத்து தகராறில் மகன் வெறிச்செயல்
x
தினத்தந்தி 23 Feb 2022 10:18 PM IST (Updated: 23 Feb 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

மாரண்டஅள்ளி அருகே சொத்து தகராறில் தந்தையை வெட்டிக்கொலை செய்த மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பாலக்கோடு:
மாரண்டஅள்ளி அருகே சொத்து தகராறில் தந்தையை வெட்டிக்கொலை செய்த மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சொத்து தகராறு
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள எருதுகூடஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 75). விவசாயி. இவருக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இவரது மனைவி முனியம்மாள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் முனியப்பன் தனது மகள் நாகம்மாள் வீட்டில் வசித்து வந்தார். 
இந்தநிலையில் முனியப்பன் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை மகள்களுக்கு பிரித்து கொடுக்க முயன்றுள்ளார். இதற்கு அவரது மகன் மாது (35) எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதையும் மீறி முனியப்பன் கடந்த வாரம் ஒரு ஏக்கர் நிலத்தை வேறு நபருக்கு விற்பனை செய்ய விலை பேசி ரூ.1 லட்சம் முன் பணம் வாங்கியதாக தெரிகிறது. 
வெட்டிக்கொலை
இதனால் ஆத்திரமடைந்த மாது நேற்று மதியம் தந்தையிடம் சென்று தகராறு செய்துள்ளார். அப்போது மாது, தந்தை முனியப்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் மாது அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மாதுவை வலைவீசி தேடி வருகின்றனர். 
சொத்து தகராறில் தந்தையை மகனே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story