நாமக்கல் மண்டலத்தில் முட்டை விற்பனையில் குளறுபடிகளை களைய புதிய குழு அமைப்பு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விற்பனையில் குளறுபடிகளை களைய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விற்பனையில் குளறுபடிகளை களைய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
விற்பனையில் குளறுபடி
நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு ஒவ்வொரு வாரமும் 3 நாட்கள் முட்டைக்கான விலையை நிர்ணயம் செய்கிறது. ஆனால் அந்த விலையில் இருந்து சில வியாபாரிகள் குறைத்து, அதாவது அதிக மைனஸ் விலைக்கு பண்ணையாளர்களிடம் வாங்கி வருகின்றனர்.
இதனால் முட்டை விற்பனையில் குளறுபடி ஏற்பட்டு கோழிப்பண்ணையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்கவும், மைனஸ் விலையை கட்டுப்படுத்தவும் புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
புதிய குழு அமைப்பு
இதுதொடர்பாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல்லில் முட்டை அதிக மைனஸ் விலைக்கு கட்டுப்பாடு இல்லாமல் விற்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல அலுவலகத்தில் அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் முட்டை வியாபாரிகள் அடங்கிய ஒரு சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், நாமக்கல் முட்டை உற்பத்தியாளர் சங்கம் மற்றும் நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட எந்த சங்கமும் இனி மைனஸ் அறிவிப்பு செய்ய வேண்டாம் என்றும், அதற்கு மாற்றாக தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம், தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம், நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சொசைட்டி, நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்கம், நாமக்கல் முட்டை உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல, வட்டார குழு, மத்திய செயற்குழு ஆகிய அனைவரும் உள்ளடக்கிய ஒரு குழு அமைப்பது என்றும், இனி வரும் காலங்களில் அந்த குழுவின் மூலம் மைனஸ் விலை அறிவிப்பு செய்யலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
மைனஸ் விலை அறிவிப்பு
இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மண்டல அலுவலகத்தில் அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் முட்டை வியாபாரிகள் அடங்கிய ஒரு குழு, நாமக்கல் முட்டை விற்பனை விலை நிர்ணய ஆலோசனைக்குழு என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் இந்த குழு மட்டுமே மைனஸ் விலையை அறிவிக்கும். ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முட்டை விலையை அறிவிக்கிறது. அதே போல இந்த குழுவும் ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.45 மணியளவில் மைனஸ் விலையை அறிவிக்கும்.
எனவே பண்ணையாளர்கள் அனைவரும் இந்த குழு அறிவிக்கும் மைனஸ் விலையையே பின்பற்ற வேண்டும். இக்குழு அறிவிக்கும் மைனஸ் விலையை விட கூடுதலாக கேட்கும் வியாபாரி குறித்து அந்தந்த பகுதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் வட்டார குழு தலைவர்களிடமோ, நாமக்கல் மண்டல அலுவலகத்திலோ, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க அலுவலகத்திலோ, தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளன அலுவலகத்திலோ, ராசிபுரத்தில் உள்ள நாமக்கல் மண்டல முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சொசைட்டி அலுவலகத்திலோ அல்லது நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்திலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அனைவரின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே மைனஸ் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வழி செய்ய முடியும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story