நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ.33 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
விவசாயியிடம் வாங்கிய நெல் மூடைகளுக்கு பில் வழங்க கொள்முதல் நிலையத்தில் ரூ.33 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்டார்
தொண்டி
விவசாயியிடம் வாங்கிய நெல் மூடைகளுக்கு பில் வழங்க கொள்முதல் நிலையத்தில் ரூ.33 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.
நெல் மூடைகள்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள டி.கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 64). விவசாயி. இவரது 559 நெல் மூடைகளை விற்பனை செய்வதற்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளார். பின்னர் அதில் குறிப்பிட்ட தேதியில் பாண்டுகுடியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
ஆனால் அங்கு 2 நாட்களுக்கு பின்னர் இவரது நெல் மூடைகளை கொள்முதல் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து கணேசன், விற்பனை செய்த நெல்லுக்கு பில் கேட்டுள்ளார். ஆனால் அங்கு பொறுப்பு அதிகாரியாக பணியில் இருந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பில் கலெக்டரான ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியை சேர்ந்த ராமராஜ்(52),் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு மூடை ஒன்றுக்கு ரூ.60 வீதம் ரூ.33 ஆயிரத்து 540 லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் பணம் கொடுக்காததால் பில் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் விவசாயி கணேசன் ரூ.10 ஆயிரத்தை ராமராஜிடம் கொடுத்துள்ளார். இதனை பெற்றுக் கொண்ட ராமராஜ் பாக்கி தொகையை கொடுத்து விட்டு பில் வாங்கிக்் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
கைது
இதுகுறித்து கணேசன், ராமநாதபுரம் ஊழல் கண்காணிப்பு தடுப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ராஜேசுவரி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பாண்டுகுடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று மறைந்து நின்றிருந்தனர். அப்போது ரசாயன பவுடர் தடவிய ரூ.23 ஆயிரத்து 540-ஐ கணேசன், ராமராஜிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும், களவுமாக ராமராஜை கைது செய்தனர்.
இதைதொடர்ந்து, அவரிடம் இருந்து கணக்கில் வராத மேலும் ரூ.65 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனைக்கு விவசாயிகளுக்கு உரிய பில் வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நடவடிக்கை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story