வேலூரில் மசூதி கட்ட எதிர்ப்பு தெரிவித்து கடைகள் அடைப்பு. இருதரப்பினரும் திரண்டதால் போலீஸ் குவிப்பு


வேலூரில் மசூதி கட்ட எதிர்ப்பு தெரிவித்து கடைகள் அடைப்பு. இருதரப்பினரும் திரண்டதால் போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 24 Feb 2022 1:10 AM IST (Updated: 24 Feb 2022 1:10 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் சைதாப்பேட்டையில் மசூதி கட்ட எதிர்பு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டது. இருதரப்பினரும் திரண்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

வேலூர்

வேலூர் சைதாப்பேட்டையில் மசூதி கட்ட எதிர்பு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டது. இருதரப்பினரும் திரண்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

கடைகள் அடைப்பு

வேலூர் சைதாப்பேட்டை மெயின் பஜார் அருகே வாணியர் வீதியில் சர்க்கார் மண்டித் தெரு உள்ளது. இங்கு ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அங்கு கடைகள் வைத்து வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு ஒரு ஐஸ் கம்பெனி செயல்பட்டு வந்தது. தற்போது அங்கு ஐஸ் உற்பத்தி செய்யப்படவில்லை. இந்தநிலையில் அந்த இடத்தில் மசூதி கட்ட ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதற்கு அந்த பகுதியில் வசிப்பவர்களும், வியாபாரிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலை அங்கு மசூதி கட்ட எதிர்ப்பு தெரிவித்து மெயின் பஜாரில் உள்ள நகை அடகு கடைகள், டீ கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. 

இருதரப்பினர் திரண்டதால் பதற்றம்

மேலும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக இந்து முன்னணி, பா.ஜ.க. நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.

இதேபோல மசூதி கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்தவர்களும் ஒன்று திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அந்த இடத்தில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது இரு தரப்பினரும் எதிர்ப்பு மற்றும் ஆதரவு கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு கூடுதலாக பதற்றம் உருவானது.

போலீஸ் குவிப்பு

வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இரு தரப்பினரும் கலைந்து செல்லாமல் அங்கேயே நின்று கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து கயிறு கட்டி போலீசார் அரண் போல் நின்று இருதரப்பினரும் அருகருகே செல்லாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் அங்கு வெளியாட்கள் வருவதை தடுக்க அந்த பகுதி முழுவதும் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரையும் போலீசார் அங்கிருந்து கலைத்தனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

Next Story