170 வார்டுகளை தட்டி தூக்கிய சுயேச்சைகள்


170 வார்டுகளை தட்டி தூக்கிய சுயேச்சைகள்
x
தினத்தந்தி 24 Feb 2022 1:15 AM IST (Updated: 24 Feb 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் 170 வார்டுகளில் வென்றுள்ளனர். இதனால் அரசியல் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர். தலைவர், துணை தலைவர் தேர்தலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறினர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் 170 வார்டுகளில் வென்றுள்ளனர். இதனால் அரசியல் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர். தலைவர், துணை தலைவர் தேர்தலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறினர்.
தேர்தல் முடிவுகள்
குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளில் உள்ள கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 979 வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு நடந்தது. இதில் பேரூராட்சிகளின் 4 வார்டுகளில் 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் 975 கவுன்சிலர்களுக்கு நடந்த தேர்தலில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 4,366 பேர் களம் கண்டனர்.
இந்த தேர்தலில் மாவட்டத்தின் ஒரு பகுதியில் மும்முனைப் போட்டியும், ஒரு பகுதியில் 5 முனைப்போட்டியுமாக இருந்தது. இதற்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது. நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக பா.ஜனதா, அ.தி.மு.க., சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
நாகர்கோவில் மாநகராட்சியை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 52 வார்டுகளில் மும்முனை போட்டி நிலவியது. இதில் தி.மு.க. கூட்டணி 32 இடங்களையும், பா.ஜனதா 11 இடங்களையும், அ.தி.மு.க. 7 இடங்களையும், சுயேச்சைகள் 2 இடங்களையும் கைப்பற்றியது. மாநகராட்சியை பொறுத்தவரையில் சுயேச்சை ஒற்றை இலக்கத்திலேயே அவர்களுடைய வெற்றி நின்று விட்டது. தி.மு.க. கூட்டணி தான் மேயர், துணை மேயர் பதவிகளை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அவர்கள் தேவையான வார்டுகளை கைப்பற்றி இருப்பதால் சுயேச்சைகளின் ஆதரவை அவர்கள் எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை.
சுயேச்சைகள் வெற்றி
அதேநேரத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சுயேச்சைகள் அதிக அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் சில நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் சுயேச்சைகள் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் அரசியல் கட்சிகளைவிட அதிகமான வார்டுகளை சுயேச்சைகள் பெற்றிருக்கிறார்கள். சில பேரூராட்சி வார்டுகளில் அரசியல் கட்சிகளையே தோற்கடித்து சுயேச்சைகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
உதாரணமாக அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் தி.மு.க. கூட்டணி 4 இடங்களையும், அ.தி.மு.க. 3 இடங்களையும், பா.ஜனதா ஒரு இடத்தையும் பிடித்துள்ளன. ஆனால் சுயேச்சைகள் 7 வார்டுகளை கைப்பற்றி உள்ளன. ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் தி.மு.க. கூட்டணி ஒரு இடத்தையும், அ.தி.மு.க. 5 இடங்களையும், பா.ஜனதா ஒரு இடத்தையும் பிடித்துள்ளன. ஆனால் சுயேச்சைகள் 11 வார்டுகளை கைப்பற்றியிருக்கிறார்கள்.
நகராட்சியில்...
இதேபோல் கப்பியறை பேரூராட்சியில் அ.தி.மு.க. ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. தி.மு.க. கூட்டணி 4 இடங்களையும், பா.ஜனதா 5 இடங்களையும் பிடித்துள்ளன. ஆனால் சுயேச்சைகள் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல் முளகுமூடு பேரூராட்சியில் 5 வார்டுகளையும், புத்தளம் பேரூராட்சியில் 6 வார்டுகளையும், ரீத்தாபுரம் பேரூராட்சியில் 4 வார்டுகளையும், சுசீந்திரம் பேரூராட்சிகளில் 5 வார்டுகளையும், திருவிதாங்கோடு பேரூராட்சியில் 6 வார்டுகளையும், வெள்ளிமலை பேரூராட்சியில் 6 வார்டுகளையும், வில்லுக்குறி பேரூராட்சியில் 6 இடங்களையும் சுயேச்சைகள் கைப்பற்றியுள்ளன. இதனால் அகஸ்தீஸ்வரம், ஆரல்வாய்மொழி, புத்தளம் போன்ற பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்வு செய்வதற்கான முக்கிய சக்திகளாக சுயேச்சைகள் இருக்கிறார்கள். பேரூராட்சியில் 5 வார்டுகளை தே.மு.தி.க. கைப்பற்றி உள்ளது.
இதேபோல் பத்மநாபபுரம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் 7 வார்டுகளை தி.மு.க.வும், 7 வார்டுகளை பா.ஜனதாவும், ஒரு வார்டை ஜனதாதளமும் கைப்பற்றியுள்ளன. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு இணையாக 6 வார்டுகளை சுயேச்சைகள் இந்த நகராட்சியில் கைப்பற்றியுள்ளனர். எனவே இவர்கள் துணை இல்லாமல் நகரசபை தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்வு செய்ய முடியாது என்ற நிலை அதிக இடங்களை கைப்பற்றியுள்ள தி.மு.க. மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு எற்பட்டுள்ளது.
வெற்றியை நிர்ணயிக்கும் சக்தி
இதேபோல் குளச்சல் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இதில் 11 வார்டுகளை தி.மு.க.வும், பா.ஜனதா 4 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும், அ.தி.மு.க. ஒரு இடத்தையும் பிடித்துள்ளன. ஆனால் 6 வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த நகராட்சியைப் பொறுத்தவரையில் நகரசபை தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்ற போதுமான வார்டுகள் தி.மு.க. கூட்டணிக்கு கிடைத்துள்ளது. ஆனாலும் பா.ஜனதா, காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை விட சுயேச்சைகள் அதிக இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதாவது மாநகராட்சியில் 2 வார்டுகளையும், நகராட்சிகளில் 13 வார்டுகளையும், பேரூராட்சிகளில் 155 வார்டுகளையும் சுயேச்சைகள் பிடித்துள்ளனர். குமரி மாவட்டத்தில் 170 வார்டுகளை சுயேச்சைகள் தட்டி தூக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ள பத்மநாபபுரம் நகராட்சி மற்றும் அகஸ்தீஸ்வரம், ஆரல்வாய்மொழி, புத்தளம் போன்ற பேரூராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் தேர்வுக்கான மறைமுகத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் தவிர்க்க முடியாத சக்தியாக சுயேச்சைகள் விளங்குகிறார்கள்.
இந்த தேர்தலில் சுயேச்சைகளின் வெற்றியை பார்த்து முக்கிய அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இப்படியே போனால் இனி வருங்காலங்களில் சுயேச்சைகளின் ஆதிக்கம் நீடித்து விடுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.

Next Story