‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெரு நாய்கள் பிடிக்கப்படுமா?
தஞ்சை மாநகரில் எல்லா பகுதிகளிலும் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக தொல்காப்பியர் சதுக்கம், சேவியர் நகர், மோத்திரப்பச்சாவடி, வண்டிக்காரத்தெரு, எம்.கே. மூப்பனார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் தெருக்களில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டி, விரட்டி கடித்து வருகின்றன. சில நேரங்களில் இந்த நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிகளும் அவ்வப்போது அரங்கேறுவதை பார்க்க முடிகிறது. மேலும் ஆடு, மாடுகளையும் இந்த நாய்கள் கூட்டம் விட்டு வைப்பதில்லை. இவைகளையும் கடித்து வருகின்றன. எனவே தஞ்சை மாநகரில் தெருநாய்களை பிடிக்க மாநகராட்சி ஆணையர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.செல்வராணி, சேவியர் நகர்.
வெளியேறும் கழிவுநீர்
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி அருகே வாடகை கார்கள் நிறுத்தப்படும் இடத்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி அருகே பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறுவது பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-பொதுமக்கள், தஞ்சாவூர்.
Related Tags :
Next Story