‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி
திறந்த வெளியில் எரிக்கப்படும் வயர்கள்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதிகளில் பல்வேறு ஊர்களில் மின்சார இணைப்புக்கு பயன்படுத்தும் வயர்களை ஆங்காங்கே எரித்து வருகிறார்கள். இவ்வாறு எரிக்கப்படும் போது அதிலிருந்து வெளியேறும் கரும்புகை காரணமாக காற்று மாசு ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் செல்லும் பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. எனவே திறந்தவெளியில் வயர்களை எரிப்பதை தடுக்க வேண்டும்.
-கிருஷ்ணன், பாலக்கோடு.
ஆமை வேகத்தில் சாலை பணி
தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை ஊராட்சியை அடுத்த ராஜாப்பேட்டை கிராமத்தில் 200 குடும்பங்கள் உள்ளன. இங்கு சாலை அமைப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணி தொடங்கப்பட்டது. இதுவரை ஜல்லிக்கற்கள் மட்டும் போட்டு அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் வாகனங்கள் செல்லும் போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. சில நேரங்களில் எதிர்பாராமல் விபத்துகளும் ஏற்படுகின்றன. மழைக்காலங்களில் மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை பணியை விரைவு படுத்த வேண்டும்.
-ஊர்மக்கள், ராஜாப்பேட்டை தர்மபுரி.
தெருநாய்கள் தொல்லை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்- பட்டணம் செல்லும் வழியில் உள்ள காந்தி சாலை அருகில் பெண்கள் கழிப்பறை பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தர்மராஜா, ராசிபுரம், நாமக்கல்.
நோய் பரவும் அபாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சேலம் மெயின் ரோடு காமராஜ் நகரில் சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. இன்றுவரை பணி நிறைவடையாமல் இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சாக்கடை கால்வாய் அமைத்து கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மு.முகமது ஜாவித் பாஷா, காமராஜர் நகர், கிருஷ்ணகிரி.
மூடப்படாத குழியால் ஆபத்து
சேலத்தில் இருந்து ஓமலூர் செல்லும் 5 ரோடு இரண்டு அடுக்கு மேம்பாலம் இறங்கும் வழியில் பராமரிப்பு பணிக்காக குழி தோண்டப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை அந்த குழி மூடப்படாததால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. அடிக்கடி சிறு சிறு விபத்துகளும் நடக்கிறது. எனவே மூடப்படாத இந்த குழியால் ஆபத்து அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் நலன் கருதி அந்த குழியை விரைவில் மண் போட்டு மூட வேண்டும்.
-எஸ்.சுதாகர், சேலம்.
==
தார் சாலை சீரமைக்கப்படுமா?
சேலம் மாவட்டம் கொங்கவல்லி தாலுகா உலிபுரம் பஸ் நிறுத்தம் தார் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த தார் சாலையை சீரமைக்க வேண்டும்.
-ராம்குமார், சேலம்.
Related Tags :
Next Story