நெல்லையில் புத்தக திருவிழா 18-ந்தேதி தொடக்கம் கலெக்டர் விஷ்ணு தகவல்
நெல்லையில் புத்தக திருவிழா வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது என கலெக்டர் விஷ்ணு கூறினார்
நெல்லை:
நெல்லையில் புத்தக திருவிழா வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது என கலெக்டர் விஷ்ணு கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
புத்தக திருவிழா
தமிழ் இலக்கிய எழுத்தாளர்கள் பலரையும், சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களையும் உருவாக்கிய நெல்லை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 5-வது புத்தகத்திருவிழா நடத்தப்பட உள்ளது.
இந்த புத்தக திருவிழா பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடக்கிறது. தாமிரபரணி நதி மற்றும் நதியின் பெருமையை எடுத்துக்கூறும் வகையில் தாமிரபரணி நதி மற்றும் பொருநை நாகரீகத்தின் பெருமையை எடுத்துக்கூறும் வகையில் இந்த விழா “பொருநை நெல்லை புத்தக திருவிழா 2022” என்ற தலைப்பில் நடத்தப்பட உள்ளது.
தள்ளுபடி விலை
இதில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் 100-க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளார்கள். இங்கு கலை, இலக்கியம், சமூக நாவல்கள், வரலாற்று நாவல்கள், தன்னம்பிக்கை மற்றும் சுய முன்னேற்றத்துக்கான புத்தகங்கள் அரசு துறைகளில் வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டும் புத்தகங்கள் போன்ற பல லட்சக்கணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் 10 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும்.
கருத்தரங்கு
சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், “நெல்லையில் நீர்வளம், தூய பொருநை நெல்லைக்கு பெருமை” என்ற தலைப்பில் அரங்குகள் அமைக்கவும், பல்வேறு கருத்தரங்குகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும், இலக்கியம், வரலாறு மற்றும் பண்பாடு ஆகியவற்றை விளக்கும் வகையில் தலைசிறந்த பேச்சாளர்களில் சிறப்புரைகளும் நாள்தோறும் நடைபெற உள்ளது.
உணவகம்
புத்தக திருவிழாவை காண வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பாரம்பரிய மிக்க உணவுகளை வழங்கும் வகையில் உணவகங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
விழாவில் கலந்து கொள்ளும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கைத்தொழில் மற்றும் கலைகள் தொடர்பான பயிற்சி பட்டறைகள், கலை இலக்கிய போட்டிகள், பிரபல எழுத்தாளர்களின் நேரடி உரையாடல்கள், சிறுவர் இலக்கியம் படைத்தல், விளையாட்டு துறையில் பல்வேறு சாதனை புரிந்த வீரர்களையும், தொழில் துறையில் சாதனை புரிந்து சிறந்த தொழில் செய்து வருபவர்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடல் காட்சி, ஊடக மாணவர்கள் பயன்பெறும் வகையில் குறும்படங்களை உருவாக்கி பயிற்சி எடுத்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
லோகோ
பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இந்த புத்தக திருவிழாவிற்கான இலச்சினையை (லோகோ) உருவாக்கும் போட்டி அறிவிக்கப்படுகின்றது. `தூய பொருநை நெல்லை பெருமை' என்ற தலைப்பில் பென்சில் படமாக, ஓவியமாக, ஓவிய வரைபடமாக வரைந்து வருகிற 2-ந் தேதி மாலைக்குள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் மிகச்சிறந்த ஓவியருக்கு புத்தக திருவிழாவில் அதிகாரப்பூர்வ லோகோ அறிவிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக நாள்தோறும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சி விவரங்கள் அனைத்தையும் நெல்லை bookfair.in என்ற இணையதளத்திலும் காணலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் சிறப்பு லோகோவை வெளியிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ் குமார், எழுத்தாளர் நாறும்பூநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story