புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
கயத்தாறு அருகே திருமணமாகி 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
கயத்தாறு:
கயத்தாறு அருகே திருமணமாகி 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம்
கயத்தாறு அருகே அகிலாண்டபுரம் பஞ்சாயத்தை சேர்ந்த கரிசல்குளம் நடுத்தெருவில் வசித்து வருபவர் வேலுச்சாமி. விவசாயி. இவரது மகன் நடராஜமூர்த்தி (வயது 27.
10-ம் வகுப்பு படித்துவிட்டு சென்ட்ரிங் வேலை செய்து வந்தார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த உறவினர் முருகன் என்பவரின் மகள் அனு சங்கீதா(19) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், நடராஜ மூர்த்தி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். கடந்த சிலநாட்களாக வயிற்று வலி அதிகமாக இருந்ததால் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
விஷம் குடித்தார்
இந்த நிலையில், சம்பவத்தன்று ஊருக்கு அருகிலுள்ள அவரது தோட்டத்தில் பயிர்களுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து விட்டு, அங்கேயே மயங்கியுள்ளார். இரவு வரை வீடு திரும்பாத அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை.
தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது மயங்கிய நிலையில் கிடந்த நடராஜ மூர்த்தியை குடும்பத்தினர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
சாவு
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story