நண்பனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
கோவை சிங்காநல்லூரில் நண்பனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கோவை
கோவை சிங்காநல்லூரில் நண்பனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கட்டிட தொழிலாளி
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் குப்பன் (வயது 31). இவர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். அப்போது அவருடன் பணி புரிந்த சிங்காநல்லூர் செட்டியார் தோட்டம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நண்பர்களாகி அடிக்கடி சேர்ந்து மது அருந்தினர்.
இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் இருவரும் சேர்ந்து மது அருந்தினர். அப்போது குப்பன், சக்திவேலிடம் மது குடித்ததற்கான பணத்தை கொடுக்கும்படி கூறியுள்ளார். ஆனால் சக்திவேல் தன்னிடம் பணம் இல்லை மற்றொரு நாள் தருவதாக தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. மேலும் குப்பன், சக்திவேல் தாயார் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனால் இருவரும் கட்டிபுரண்டு சண்டை போட்டனர். அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஆயுள்தண்டனை
இந்த சம்பவம் நடைபெற்று ஒருவாரம் கழித்து 15.5.2019 அன்று சிங்காநல்லூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் இருவரும் மது வாங்கினர். பின்னர் அங்கேயே மது குடித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது சக்திவேல், குப்பனை பார்த்து எதற்காக தனது தாயாரை பற்றி அவதூறாக பேசினாய் என்று கேட்டு உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் ஒருவரை, ஒருவர் தாக்கினர்.
இதில் குப்பன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது சக்திவேல், அங்கு கிடந்த அம்மிக்கல்லை எடுத்து குப்பன் தலையில் போட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இந்த கொலை தொடர்பாக கோவை சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கோவை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன், குப்பனை கொலை செய்த சக்திவேலுக்கு ஆயுள்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று விதித்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story