செஞ்சேரி ஒழுங்குமுறை கூடத்தில் கொப்பரை ஏலம் எப்போது?


செஞ்சேரி ஒழுங்குமுறை கூடத்தில் கொப்பரை ஏலம் எப்போது?
x
தினத்தந்தி 24 Feb 2022 8:07 PM IST (Updated: 24 Feb 2022 8:07 PM IST)
t-max-icont-min-icon

செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் எப்போது நடைபெறும் என்பது குறித்து அறிவிப்பு வெளியிட விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சுல்தான்பேட்டை

செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் எப்போது நடைபெறும் என்பது குறித்து அறிவிப்பு வெளியிட விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஒழுங்குமுறை விற்பனை கூடம்

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 11-ந் தேதி முதல் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கியது. 

அரவை கொப்பரை கிலோ ரூ.105.90-க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.110-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கொப்பரை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவைகளை கொண்டு வந்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

விவசாயிகள் ஏமாற்றம்

ஆனால் வாரத்தில் எந்த நாளில் கொப்பரை கொள்முதல் நடைபெறும் என்று ஒழுங்கு முறை விற்பனை கூடம்  சார்பில் அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டாலும், முறையாக பதில் சொல்வது இல்லை என்று கூறப்படுகிறது. 

இதன் காரணமாக கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வர நினைக்கும் விவசாயிகள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மேலும் அவர்கள் கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வரும்போது, அந்த நாளில் கொள்முதல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவிப்பதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பண செலவுடன், காலவிரயமும் ஏற்படுகிறது.

நடவடிக்கை

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
செஞ்சேரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் எந்த நாளில் கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும் அது தொடர்பான நோட்டீசை அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். 

இதுபோன்று செய்தால் மட்டுமே விவசாயிகள் கொப்பரையை குறித்த நாளில் கொண்டு வர முடியும். மற்ற நாட்களில் கொண்டு வந்து ஏமாற்றம் அடையாமல் இருப்பார்கள். எனவே உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story