ஊட்டி அருங்காட்சியகத்தில் பழங்குடியின மக்களின் மாதிரி சிலைகள்
ஊட்டி அருகே அருங்காட்சியகத்தில் பழங்குடியினர் மாதிரி சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. அதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
ஊட்டி
ஊட்டி அருகே அருங்காட்சியகத்தில் பழங்குடியினர் மாதிரி சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. அதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
பழங்குடியினர் அருங்காட்சியகம்
தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஊட்டி அருகே முத்தோரை பாலாடாவில் பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த வளாகத்தில் பழங்குடியினர் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.
நீலகிரியில் வாழும் தோடர், கோத்தர், இருளர், பனியர், காட்டுநாயக்கர், குரும்பர் ஆகிய 6 பழங்குடியின மக்கள் பயன்படுத்தி வரும் பாரம்பரிய பொருட்கள், புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. தொடக்கத்தில் இங்கு சுற்றுலா பயணிகள் குறைவாகவே வந்தனர்.
மாதிரி சிலைகள்
இதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு முதல் அருங்காட்சியகத்தை புதுப்பிக்கும் பணி நடந்தது. ரூ.45 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதத்தில் திறக்கப்பட்டது.
அங்கு தோடர், கோத்தர், குரும்பர், இருளர், காட்டுநாயக்கர், பனியர் பழங்குடியின மக்களின் ஆண், பெண் என 12 மாதிரி சிலைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.
இதற்காக இந்த பழங்குடியின மக்களை நேரில் வர வைத்து அவர்களை புகைப்படம் எடுக்கப்பட்டது. பின்னர் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கலைஞர்கள் அவர்களின் சிலையை பாரம்பரிய உடை மற்றும் ஆபரணங்களோடு தத்ரூபமாக வடிவமைத்தனர்.
களிமண் மூலம் பழங்குடியினர் தோற்றத்தில் பொம்மை செய்து, பின்பு அவர்களது உருவத்தை பைபர் மூலம் வடிவமைத்து இருக்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் ரசிப்பு
தற்போது அந்த மாதிரி சிலைகள் கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப்பட்டு விளக்கு வெளிச்சத்தில் அழகாக பிரதிபலிக்கிறது. மேலும் பழங்குடியின மக்களின் மாதிரி வீடுகள், கோவில்கள் மற்றும் வெட்டிவேர், குண்டுமல்லி, துளசிமணி, தேன் அடை போன்ற மருத்துவ குணங்கள் வாய்ந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
குறிப்பாக தமிழகத்தில் வாழும் 36 வகையான பழங்குடியின மக்களின் புகைப்படங்கள், 1916-ம் ஆண்டு எடுத்த புகைப்படங்கள், சுவர் ஓவியங்கள் இடம்பெற்று உள்ளன. தற்போது இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று அங்குள்ள மாதிரி சிலைகளை பார்வையிட்டு பழங்குடியினரின் வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டு செல்கிறார்கள்.
ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயன்
இதுகுறித்து பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குனர் உதயகுமார் கூறும்போது, நீலகிரியில் முதல் முறையாக பழங்குடியினர் சிலைகள் வடிவமைத்து காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.
அவர்களது வாழ்வியல் முறைகள் குறித்து ஆவணப்படம் தயாரித்து அருங்காட்சியகத்தில் 2 டி.வி.க்களில் ஒளிபரப்பப்படுகிறது. பழங்குடியினர் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவ-மாணவிகள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து செல்கின்றனர். அவர்களின் ஆராய்ச்சிக்கு பயனளிக்கிறது என்றார்.
Related Tags :
Next Story