தண்ணீருக்காக குடங்களுடன் அலையும் பெண்கள்
வாய்மேடு பகுதியில் 6 நாட்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பெண்கள் தண்ணீருக்காக குடங்களுடன் அலைந்து வருகின்றனர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாய்மேடு:
வாய்மேடு பகுதியில் 6 நாட்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பெண்கள் தண்ணீருக்காக குடங்களுடன் அலைந்து வருகின்றனர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
குழாயில் உடைப்பு
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி நீரேற்று நிலையத்தில் இருந்து துளசியாப்பட்டினம், அண்ணாப்பேட்டை, வாய்மேடு. தகட்டூர், மருதூர் ஆயக்காரன்புலம் வழியாக வேதாரண்யத்திற்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இதில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக அண்ணாப்பேட்டை ,வாய்மேடு, மருதூர், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பிரதான சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது .
குடிநீர் தட்டுப்பாடு
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாக கடந்த ஒரு வாரமாக கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்ற முடியவில்லை. இதனால் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தண்ணீருக்காக அலையும் பெண்கள்
தகட்டூர் சமத்துவபுரம் பகுதியில் ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன இப்பகுதியில் கடந்த 6 நாட்களாக குடிநீர் வராததால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் குடங்களுடன் தண்ணீருக்காக அலைந்து வருகின்றனர்.
உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் வண்டுவாஞ்சேரி பகுதியில் உள்ள குடிநீர் நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என அந்த பகுதி பெண்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story