மயான கொள்ளை விழாவில் மாவட்ட நிர்வாகத்தின் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள்


மயான கொள்ளை விழாவில் மாவட்ட நிர்வாகத்தின் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 Feb 2022 10:57 PM IST (Updated: 24 Feb 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மயான கொள்ளை விழாவில் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள வழிமுறைகளை விழாக்குழுவினர் கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மயான கொள்ளை விழாவில் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள வழிமுறைகளை விழாக்குழுவினர் கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

 மயானக்கொள்ளை திருவிழா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் மயான கொள்ளை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 1, 2-ந் தேதிகளில் 2 நாட்கள் (செவ்வாய், புதன்கிழமை) நடைபெற உள்ளது. விழா தொடர்பாக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக காவல், உள்ளாட்சி, தீயணைப்பு துறையினர் மற்றும் விழாக்குழுவினர் ஆகியோரை கொண்டு கோட்ட அளவிலான கூட்டம் நடத்தி, விழா நடத்துபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விழா குழுவினருக்கும், தொடர்புடைய அலுவலர்களுக்கும் விழா தினத்திற்கு முன்பாக உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

மயான கொள்ளை விழாவில் தேரின் உயரம், அதன் அடிப்பாகம் உள்பட மொத்தம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மயான கொள்ளை சாமி சிலை அமைக்கப்பட்ட வாகனத்தில் தீ பிடிக்க கூடிய வகையில் உள்ள பொருட்களை பயன்படுத்தாமல், மின்சாதனப் பொருட்கள் அனைத்தும் எளிதில் தீப்பிடிக்காத வகையில் உள்ளதா? என தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். தேவையான முதலுதவி பொருட்கள் வைத்திருக்க வேண்டும்.

நிபந்தனைகள்

கூம்பு வடிவ ஒலி பெருக்கி அமைப்பதை தவிர்த்து, பெட்டி வடிவிலான ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்பட கூடாது, மின்சாரம் திருடக்கூடாது. 
நிகழ்விடத்தில் எவ்வித அரசியல் கட்சியினர், மதத்தலைவர்கள் பேனர்கள் வைத்தல் கூடாது. அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் மதசார்பின்மை பாதிப்பு ஏற்படாத வகையில் வருவாய், காவல்துறையினர் விதிக்கும் நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

சாமி சிலை ஊர்வலங்கள் பகல் 12 மணிக்கு முன்பாக தொடங்கி பிற்பகல் 3 மணிக்குள் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட பாதைகளில் மட்டும், பிற மதத்தவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் செல்ல வேண்டும்.

சாமி சிலைகளை மினி லாரி, டிராக்டர் மூலமாக மட்டுமே எடுத்து செல்ல வேண்டும். மாட்டு வண்டிகள், மீன்பாடி வண்டிகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் எடுத்து செல்லக்கூடாது. பட்டாசு வெடித்தல் கூடாது. ஊர்வலத்தின்போது பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story