தலைவர் பதவியில் அமரப்போவது யார்?
பள்ளப்பட்டி, புகழூர், குளித்தலை நகராட்சிகளில் தலைவர் பதவியில் அமரப்போவது யார்? என பார்க்கலாம்.
கரூர்
பள்ளப்பட்டி
பள்ளப்பட்டி பேரூராட்சி சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளப்பட்டி பேரூராட்சியாக இருந்தபோது 15 வார்டுகள் இருந்தது. தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பள்ளப்பட்டி நகராட்சிக்கு தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளப்பட்டி பேரூராட்சியில் இதுவரை 9 பேர் பேரூராட்சி தலைவர்களாக இருந்துள்ளனர். தற்போது பள்ளப்பட்டி நகராட்சியில் உள்ள மொத்தம் 27 வார்டுகள் உள்ளது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் நகராட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் மும்முரமாக கட்சிப்பணி செய்தனர். இந்நிலையில் நேரடியாக நகராட்சித் தலைவர் பதவி தேர்ந்தெடுக்கப்படாமல் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் வார்டு கவுன்சிலர்கள் மூலமாக மறைமுகத் தேர்தலில் நகராட்சி தலைவர் பதவி தேர்ந்தெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பெண் வேட்பாளர்கள் வெற்றி
இந்நிலையில் கடந்த 19-ந் தேதி பள்ளப்பட்டி நகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., இ.யூ.மு.லீ., பா.ஜ.க., காங்கிரஸ்., எஸ்.டி.பி.ஐ., சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 94 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 27 வார்டுகளில் தி.மு.க. 19 வார்டுகளையும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 2 வார்டுகளையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 வார்டையும் கைப்பற்றியது. எஸ்.டி.பி.ஐ. கட்சி 1 இடத்தையும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 இடங்களையும் கைப்பற்றினர். இதன் மூலம் பள்ளப்பட்டி நகராட்சியின் முதல் நகராட்சித் தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. பள்ளப்பட்டி நகராட்சியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 9 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களில் ஒருவருமான 20-வது வார்டில் வெற்றி பெற்றுள்ள எஸ்.எ.முனவர்ஜான் 1996 முதல் 2006 வரை இரண்டு முறை பள்ளப்பட்டி பேரூராட்சி தலைவராக (தி.மு.க.) இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குளித்தலை
கடந்த 1995-ம் ஆண்டு ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் திருச்சி, கரூர், பெரம்பலூர் என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டபோது குளித்தலை பகுதி கரூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. 3-ம் நிலை நகராட்சியாக இருந்த குளித்தலை கடந்த 1998-ல் 2-ம் நிலை நகராட்சியாக தரம் உயர்ந்தது. 24 வார்டுகளை கொண்டது இந்நகராட்சி. முதன் முதலில் 1996-ல் நகராட்சி தேர்தல் நடந்தது. பின்னர் 2001, 2006, 2011ல் நகராட்சி தேர்தல் நடந்துள்ளது. 1996 மற்றும் 2001 தேர்தலில் நகர்மன்ற தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. நகர்மன்ற தலைவர் மக்களால் நேரடியாகவும், துணைத்தலைவர் நகர்மன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை இருந்தது.
இதையடுத்து 2011-ல் நடந்த நகராட்சி தேர்தலில் நகராட்சி தலைவர் நேரடியாக பொதுமக்கள் மூலமும், துணைத்தலைவர் நகர்மன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யும் முறை கொண்டுவரப்பட்டது. இதுவரை 4 முறை நடந்த குளித்தலை நகராட்சி தேர்தலில், 2006-ம் ஆண்டு தேர்தலை தவிர, நகர்மன்ற தலைவர் நேரடியாக மக்களால் வாக்கு செலுத்தி தேர்வு செய்யும் முறை இருந்தபோது அந்த 3 தேர்தலிலும் ம.தி.மு.க. கட்சி வேட்பாளர்களே 3 முறையும் வெற்றி பெற்று தலைவராக இருந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது குளித்தலை நகராட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் மூலம் மறைமுக தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் குளித்தலை நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் 21 வார்டுகளில் தி.மு.க. நேரடியாக போட்டியிட்டது.
தி.மு.க. நிர்வாகி மனைவி
2 வார்டுகளில் கூட்டணி கட்சியான ம.தி.மு.க. சார்பிலும், ஒரு வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பிலும் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 20 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்களும், ஒருவார்டில் ம.தி.மு.க. வேட்பாளர் என மொத்தம் 21 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தனி மெஜாரிட்டியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று குளித்தலை நகராட்சியை கைப்பற்றியதால் தலைவர் துணைத்தலைவர் ஆகிய இருவரும் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களே தேர்வு செய்யப்பட உள்ளனர். இருப்பினும் தி.மு.க. தலைமை அறிவிக்கும் நபர்களே தலைவராகவும், துணைத்தலைவராகவும் வரமுடியும். குளித்தலை நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் குளித்தலை முன்னாள் நகர்மன்றத் தலைவராகவும் தற்போது தி.மு.கவின் முக்கிய நிர்வாகியாக உள்ளவரின் மனைவிக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவரும் குளித்தலை நகராட்சி முன்னாள் நகர்மன்ற தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
புகழூர்
புகழூர் நகராட்சியானது 33.01 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. புகழூர் நகராட்சியில் தற்போது 24 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து புகழூர் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் தீவிர ஆர்வம் காட்டிவந்தனர்.
இந்த நிலையில் நேரடியாக நகராட்சித் தலைவர் பதவி தேர்ந்தெடுக்க படாமல் கவுன்சிலர்கள் மூலமாக மறைமுக தேர்தலில் நகராட்சித் தலைவர் பதவி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தமிழக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதனால் அதிக வார்டுகளை கைப்பற்றும் கட்சி முதல் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றும் நிலை ஏற்பட்டது. இதனால் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் கடந்த 19-ந் தேதி புகழூர் நகராட்சிக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க., பா.ம.க. மற்றும் சுயேட்சைகள் என 76 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அமைச்சரின் பார்வை
இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 22 வேட்பாளர்களில் 20 பேர் வெற்றி பெற்றனர். இதில் 10 பெண்களும், 10 ஆண்களும் உள்ளனர். இதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்று மொத்தம் 22 இடங்களை பெற்று நகராட்சியை கைப்பற்றியது. இதனால் முதல் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. புகழூர் நகராட்சியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 20 பேரில் ஒரு சிலர் மட்டுமே முதல் நகராட்சி தலைவர் பதவிக்கு ஆசைப்படுகின்றனர். ஆனால் 20 பேரில் முக்கியமான நபராக ஒருவர் மட்டுமே கருதப்படுகிறார். அவருக்கு மட்டுமே அமைச்சரின் கண் பார்வை உள்ளது. இதனால் அவருக்கு மட்டுமே முதல் நகராட்சி தலைவர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என முக்கிய கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
எதிர்பார்ப்பு
இருப்பினும் இதுவரை ஒரு சிலர் தனக்கு முதல் நகராட்சி தலைவர் வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இதனால் அமைச்சர் செந்தில்பாலாஜி யாருக்கு கருணை காட்டுகிறாரோ அவரே முதல் நகராட்சி தலைவராக பதவி ஏற்கும் வாய்ப்புள்ளது. இதனால் புகழூர் நகராட்சி முதல் தலைவர் பதவியை அலங்கரிக்க போவது யார்? என்பதை அறிய அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் மட்டுமின்றி கரூர் மேற்கு ஒன்றிய வாக்காளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
Related Tags :
Next Story