பதிவான மொத்த வாக்குகள் 33280 ல் திமுக 15395 வாக்கு
உடுமலை நகராட்சி தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 33280 ல் திமுக 15395 வாக்குகளும், முக்கிய எதிர்கட்சியான அதிமுக 6679 வாக்குகளும் பெற்றுள்ளன.
உடுமலை
உடுமலை நகராட்சி தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 33,280-ல் தி.மு.க. 15,395 வாக்குகளும், முக்கிய எதிர்கட்சியான அ.தி.மு.க. 6,679 வாக்குகளும் பெற்றுள்ளன.
உடுமலை நகராட்சி
உடுமலை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் மொத்தம் ஆண் வாக்காளர்கள் 28,274 பேரும், பெண் வாக்காளர்கள் 30,056 பேரும், இதர வாக்காளர்கள் 8 பேரும் என மொத்தம் 58,338 வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் 14-வது வார்டில் தி.மு.க.வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த ஆ.மும்தாஜ் போட்டியின்றி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனால் மீதி உள்ள 32 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி 63 வாக்குச்சாவடிகளில் நடந்தது. 14-வது வார்டில் தேர்தல் இல்லாத நிலையில் அந்த வார்டில் உள்ள வாக்காளர்களை கழித்தது போக மீதி உள்ள 32 வார்டுகளில் மொத்தம் ஆண் வாக்காளர்கள் 27,838 பேரும், பெண் வாக்காளர்கள் 29,571 பேரும், இதர வாக்காளர்கள் 8 பேரும் என மொத்தம் 57,417 வாக்காளர்கள் உள்ளனர்.
33,280 வாக்குப்பதிவு
கடந்த 19-ந்தேதி நடந்த வாக்குப்பதிவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஆண்வாக்காளர்கள் 16,240 பேரும், பெண் வாக்காளர்கள் 16,940 பேரும் என மொத்தம் 33,180 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப்பதிவு செய்திருந்தனர். அத்துடன் தபால் வாக்குகளையும் சேர்த்து மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 33,280 ஆகும். இதில் மொத்த தபால் வாக்குகளில் 5 வாக்குகள் செல்லாமல் போனதால் மீதி உள்ள செல்லத்தக்க மொத்த வாக்குகள் 33,275 ஆகும்.
கட்சிகள் பெற்ற வாக்குகள்
இதில் 26 வார்டுகளில் போட்டியிட்ட தி.மு.க. 15,395 வாக்குகள் பெற்றுள்ளது. தி.மு.க. கூட்டணியில் ஒரு வார்டில் போட்டியிட்ட ம.தி.மு.க. 963 வாக்குகளையும், 3 வார்டுகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 858 வாக்குகளையும், ஒரு வார்டில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 396 வாக்குகளையும், ஒரு வார்டில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி 267 வாக்குகளையும் பெற்றுள்ளது. இதன்படி தி.மு.க. தலைமையிலான தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் மொத்தம் 17,879 வாக்குகள் பெற்றுள்ளன.
அ.தி.மு.க
தமிழ் நாட்டில் பிரதான எதிர்கட்சியாக உள்ள அ.தி.மு.க. 32 வார்டுகளில் போட்டியிட்டு 6,679 வாக்குகளை பெற்றுள்ளது. 15 வார்டு களில் போட்டியிட்ட பா.ஜ.க. 1,710 வாக்குகளையும், 8 வார்டுகளில் போட்டியிட்ட அ.ம.மு.க. 132 வாக்குகளையும், 3 வார்டுகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. 28 வாக்குகளையும், 27 வார்டுகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 549 வாக்குகளையும் 9 வார்டுகளில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் 160 வாக்குகளையும் பெற்றுள்ளது. 22 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் மொத்தம் 39 பேர் போட்டியிட்டதில், அவர்களுக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 6,138 ஆகும்.
வெற்றி பெற்றது
மொத்தம் உள்ள 33 வார்டுகளில் ஒரு வார்டில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதையும் சேர்த்து தி.மு.க-23 வார்டுகளிலும், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ்-1, ம.தி. மு.க-1 வார்டிலும் (தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மொத்தம்-25). அ.தி. மு.க-4 வார்டுகளிலும், சுயேட்சை-4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஒற்றை இலக்க வாக்குகள்
இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 3, 5, 12, 18, 27, 33 ஆகிய 6 வார்டுகளிலும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 32-வது வார்டிலும், அ.ம.மு.க. வேட்பாளர்கள் 1, 3, 9, 10, 12 ஆகிய 5 வார்டுகளிலும், 22 வார்டுகளில் சிலவற்றில் சுயேட்சை வேட்பாளர்களாக ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்ட நிலையில் 2, 22, 27 ஆகிய 3 வார்டுகளில் தலா ஒரு சுயேச்சை வேட்பாளரும் ஒற்றை இலக்கத்தில் வாக்குகளைப்பெற்றுள்ளனர்.
Related Tags :
Next Story