போர் நடக்கும் உக்ரைன் நாட்டில் 15 ஆயிரம் இந்திய மாணவ-மாணவிகள் சிக்கி தவிப்பு


போர் நடக்கும் உக்ரைன் நாட்டில் 15 ஆயிரம் இந்திய மாணவ-மாணவிகள் சிக்கி தவிப்பு
x
தினத்தந்தி 25 Feb 2022 1:41 AM IST (Updated: 25 Feb 2022 1:41 AM IST)
t-max-icont-min-icon

போர் நடக்கும் உக்ரைன் நாட்டில் 15 ஆயிரம் இந்திய மாணவ-மாணவிகள் சிக்கி தவிப்பதாக அங்கு மருத்துவம் படிக்கும் அந்தியூர் மாணவி மவுனி சுகிதா கண்ணீருடன் கூறினார்.

போர் நடக்கும் உக்ரைன் நாட்டில் 15 ஆயிரம் இந்திய மாணவ-மாணவிகள் சிக்கி தவிப்பதாக அங்கு மருத்துவம் படிக்கும் அந்தியூர் மாணவி மவுனி சுகிதா கண்ணீருடன் கூறினார்.
உக்ரைனில் அந்தியூர் மாணவி
ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் இருந்து வந்த நிலையில் நேற்று அதிகாரப்பூர்வ போரினை ரஷியா தொடங்கியது. இதனால் உக்ரைன் நாட்டு மக்கள் மட்டுமின்றி அந்த நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக சென்றவர்களின் உறவினர்கள் வசிக்கும் நாடுகளிலும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து மருத்துவ படிப்புக்காக ஏராளமான மாணவ-மாணவிகள் உக்ரைன் சென்று உள்ளனர். அவர்களில் ஒருவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மாணவி மவுனி சுகிதா (வயது 20). இவரது தந்தை நாகராஜ், விவசாயி. தாயார் குணவதி, அம்மாபேட்டை ஒன்றிய வேளாண்மை உதவி இயக்குனராக உள்ளார். மவுனி சுகிதா அந்தியூரில் பிளஸ்-2 படித்தார். பின்னர் மருத்துவ படிப்புக்காக உக்ரைன் சென்று தற்போது 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று அவர் அவரது பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் போர் காரணமாக உக்ரைனில் தமிழ் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்தார். இதுபற்றி தகவல் அறிந்த தினத்தந்தி நிருபர் மாணவியிடம் தொலைபேசி மூலம் பேசினார்.
போர் அறிவிப்பு
அப்போது மாணவி மவுனி சுகிதா கண்ணீருடன் கூறியதாவது:-
உக்ரைனில் போர் பதற்றம் தொடங்கியது முதல் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே இந்தியா திரும்ப திட்டமிட்டேன். என்னுடன் தமிழ் மாணவ-மாணவிகள் சுமார் 50 பேரும், இந்திய அளவில் மாணவ-மாணவிகள் 1000 பேரும் இருக்கிறார்கள். நாங்கள் ஒரு வாரத்துக்கு முன்பு விமானத்தில் முன்பதிவு செய்தோம். ஆனால் விமானங்கள் ரத்து ஆனதால், நாங்கள் பயணச்சீட்டு வாங்க கொடுத்த பணம் திரும்ப கிடைக்கவே இல்லை. உக்ரைனில் 3 எல்லைகளையும் ராணுவம் அடைத்து விட்டது. நாங்கள் லிவ்விவ் நகரில் இருக்கிறோம்.
இங்கிருந்து போலந்து நாடு மிக அருகில் உள்ளது. கார் அல்லது பஸ்சில் கூட சென்று விட முடியும். ஆனால், இங்கு போர் அறிவிப்பு காரணமாக வாடகை கார்கள், பஸ் வசதி, விமான வசதி என்று எதுவும் இல்லை. இதனால் என்ன செய்வது, யாரை தொடர்பு கொண்டு உதவி கேட்பது என்றே தெரியவில்லை.
இந்திய தூதரகம் கண்டுகொள்ளவில்லை
ஏன் என்றால், இந்திய தூதரகம் எங்களை கண்டுகொள்ளவில்லை. முன்கூட்டியே நாங்கள் விமானத்தில் பயணச்சீட்டு வாங்கியபோது கூட முதலில் இந்திய தூதரகத்தைதான் தொடர்பு கொண்டோம். எப்படியாவது தூதரக அதிகாரிகள், இந்திய மாணவ-மாணவிகள் சொந்த நாட்டுக்கு வந்துவிட உதவி செய்வார்கள் என்று நம்பினோம். ஆனால், எங்கள் தொலைபேசி அழைப்புகளை அவர்கள் எடுக்கவே இல்லை.
வேலை நேரத்தில் கூட அவர்கள் எங்களை மதிக்கவில்லை. தூதரக அதிகாரிகளை எங்கள் இக்கட்டான சூழலில் உதவ வராதபோது நாங்கள் யாரிடம் உதவி கேட்பது என்றே தெரியவில்லை.
உணவு
இப்போது எங்கள் வங்கி கணக்கில் பணம் இருக்கிறது. ஆனால், உக்ரைன் டாலரில் அதை தர மறுக்கிறார்கள். ஏ.டி.எம். மையங்களுக்கு செல்லலாம் என்று சென்றோம். அங்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்து இருக்கிறார்கள். நாங்கள் சென்றபோது சுமார் 30 பேர் பணம் எடுத்த நிலையில் ஏ.டி.எம். மையத்தையும் மூடி விட்டார்கள். எங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து உணவை சேமித்துக்கொள்ளலாம் என்று கடைகளுக்கு சென்றோம். ஆனால், அங்கும் எதுவும் இல்லை.
எதுவும் இல்லை என்றால் அனைத்தையும் மக்கள் வாங்கி விட்டதால் கடைகளே காலியாக உள்ளன. எங்களுக்கு கிடைத்த சில உணவுகளை சேகரித்து வைத்து இருக்கிறோம். இதை வைத்து எங்களால் ஒரு வார காலம் சாப்பிட முடியுமா? என்பது சந்தேகம். என்ன செய்வது என்று தெரியவில்லை.
விசா கேட்கும் துருக்கி
இதற்கிடையே நாங்கள் வசிக்கும் லிவ்விவ் நகரில் இருந்து துருக்கிக்கு சென்று அங்கிருந்து சார்ஜா போய், இந்தியா வந்து விடலாம் என்று விமானம் முன்பதிவு செய்தோம். அப்போது துருக்கிக்கு செல்ல விசா ஏதேனும் தேவையா? என்று கேட்டோம். அப்போது, விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்பவர்களுக்கு விசா வேண்டும். விமான நிலையத்தில் இருந்து உடனடியாக வேறு விமானம் ஏறும் பயணிகளுக்கு தேவை இல்லை என்று கூறினார்கள். ஆனால், இந்தியர்களுக்கு விசா தர முடியாது என்று எங்களை விமானத்தில் ஏறவே துருக்கி அனுமதிக்கவில்லை. அந்த வகையிலும் பயணச்சீட்டுக்காக கட்டிய பணம் திரும்ப வரவில்லை.
தலைநகரான கியூவ் செல்ல வேண்டும் என்றால் 8 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்ய வேண்டும். அது தற்போதைய நிலையில் சாத்தியமில்லை. இங்கு எங்களுக்கு இருக்கும் ஒரே வழி போலந்து செல்வதுதான். ஆனால் எந்த போக்குவரத்து வசதியும் இல்லாமல் நாங்கள் என்ன செய்வது.
15 ஆயிரம் மாணவ-மாணவிகள்
இந்திய அரசு இந்தியர்களை மீட்க விமானம் அனுப்பியதாக கூறினார்கள். இங்கே 15 ஆயிரம் மாணவ-மாணவிகள் மட்டுமே இருக்கிறார்கள். இதில் 200 பேர் மட்டும் பயணம் செய்யும் ஒரே ஒரு விமானத்தை அனுப்பினால் போதுமா?.
எப்படியாவது போலந்து சென்று அங்கிருந்து விமானம் பிடித்து இந்தியா வந்து விடலாம் என்று திட்டமிட்டோம். நேற்று காலையில் கூட விமானங்கள் பறப்பதை பார்த்தோம். அதற்குள் அபாய சங்கு ஒலிக்கப்பட்டு போர் தொடங்கி விட்டார்கள். எங்களை மீட்க தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மாணவி மவுனி சுகிதா கண்ணீருடன் கூறினார்.
மாணவியின் பெற்றோர் நாகராஜ்-குணவதி, ஒரே தம்பி ஜீவா ராகுல் ஆகியோர் மவுனி சுகிதாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதுபோல தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் குடும்பங்கள் தங்கள் மகன்-மகள்களை எதிர்பார்த்து காத்து இருக்கிறது. அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய-மாநில அரசுகளின் கடமையாகும்.

Next Story