சேலம் மாநகராட்சி தேர்தலில் பா.ம.க., பா.ஜனதா கட்சியால் 10 வார்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்த அ.தி.மு.க.
சேலம் மாநகராட்சி தேர்தலில் பா.ம.க., பா.ஜனதா கட்சியால் அ.தி.மு.க. 10 வார்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
சேலம்
7 வார்டுகளில் வெற்றி
சேலம் மாநகராட்சி தேர்தலில் 60 வார்டுகளில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. ஆனால் தேர்தல் முடிவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 7 வார்டுகளில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற முடிந்தது. பல வார்டுகளில் 2-வது இடத்தை பிடித்த அ.தி.மு.க. 7 வார்டுகளில் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. குறிப்பாக அ.தி.மு.க. வேட்பாளர்கள் 8 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.
மாநகராட்சி தேர்தலில் சில வார்டுகளில் பா.ம.க., பா.ஜனதா கட்சியால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் 10 வார்டுகளில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை தவறவிட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. ஆகிய கட்சிகள் இருந்திருக்கும் பட்சத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வார்டுகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும் என்று அக்கட்சியினர் கூறி வருகிறார்கள்.
4-வது இடத்தில் அ.தி.மு.க.
5-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தனலட்சுமி 3,569 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் மனோன்மணி 2,131 வாக்குகள் பெற்றார். இவர்களது ஓட்டு வித்தியாசம் 1,438 ஆகும். ஆனால் பா.ம.க. வேட்பாளர் உஷாராணி 1,655 வாக்குகள் பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் இந்த வார்டில் பா.ம.க.வால் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பறிபோனது.
இதேபோல், மாநகராட்சி 6-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ராமச்சந்திரன் 3,869 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அ.ம.மு.க. வேட்பாளர் விஷ்ணுபார்த்திபன் 2,801 ஓட்டுகள் பெற்றார். இதன் வாக்கு வித்தியாசம் 1,066 ஆகும். அதேபோல் பா.ம.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அருள், 1,662 வாக்குகள் பெற்று 3-வது இடத்திலும், அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கடேஷ் 1,307 வாக்குகள் பெற்று 4-வது இடத்திற்கும் தள்ளப்பட்டனர். அதாவது பா.ம.க. கூட்டணியில் இருந்திருந்தால் அ.தி.மு.க. எளிதில் வெற்றி பெற்றிருக்கும்.
99 வாக்குகளில்...
7-வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சாரதா தேவி 3,228 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து களம் இறங்கிய அ.தி.மு.க. வேட்பாளர் கவிதாவுக்கு 3,129 வாக்குகள் கிடைத்தன. வாக்கு வித்தியாசம் 99 ஆகும். இந்த வார்டில் பா.ம.க. வேட்பாளருக்கு 634 ஓட்டுகள் கிடைத்துள்ளது. எனவே, இந்த வார்டிலும் பா.ம.க.வினால், அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது.
8-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மூர்த்தி 4,112 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அடுத்து அ.தி.மு.க.வேட்பாளர் நாகராசுக்கு 3,764 வாக்குகளுடன் 2-வது இடத்தை பிடித்தார். 348 ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இங்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ராஜன் 220 வாக்குகளும், பா.ம.க. வேட்பாளர் சோமேஸ்வரன் 137 வாக்குகளும் பெற்றனர். இதனால் இந்த வார்டில் பா.ஜனதா, பா.ம.க. கட்சியால் அ.தி.மு.க.வின் வெற்றி பறிபோனது.
பா.ஜ.க.வால்
16-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வசந்தா 3,471 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சக்திகலாவுக்கு 3,370 வாக்குகள் கிடைத்தது. இங்கு 101 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரியா 313 வாக்குகளும், பா.ஜ.க. வேட்பாளர் மலர்கொடி 291 ஓட்டுகள் பெற்றனர். இந்த வார்டில் பா.ஜனதா கட்சியால் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றியை தவறவிட்டது.
17-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராஜேஸ்வரி 3,274 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் வினோதினிக்கு 2,912 ஓட்டுகள் கிடைத்தன. பா.ஜனதா வேட்பாளர் ராஜசுலோச்சனா 472 ஓட்டுகள் பெற்றதால் தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு இடையே வாக்குகள் வித்தியாசம் 362 ஆகும். இந்த வார்டில் பா.ஜனதா கட்சியால், அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.
வெற்றி பறிபோனது
30-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அம்சா 3,094 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகவள்ளிக்கு 2,244 ஓட்டுகள் கிடைத்தன. வாக்கு வித்தியாசம் 850 ஆகும். இந்த வார்டில் பா.ஜ.க. வேட்பாளர் கோகிலா 1,104 ஓட்டுகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தார். இதனால் இங்கு பா.ஜனதா கட்சியால், அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி வாய்பை இழந்துள்ளார்.
46-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மோகனபிரியா 3,386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சுதந்திரவனிதாவுக்கு 2,387 ஓட்டுகள் கிடைத்தன. இவர்களது வாக்குகள் வித்தியாசம் 999 ஆகும். ஆனால் இந்த வார்டில் பா.ஜனதா. வேட்பாளர் தேவி 1,550 ஓட்டுகள் வாங்கினார்.
50-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் பழனிசாமி 3,609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த வார்டில் பா.ஜ.க.வேட்பாளர் சுமதி 2,894 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தை பிடித்தார். அ.தி.மு.க. வேட்பாளர் பரமசிவத்திற்கு 1,972 வாக்குகளுடன் 3-ம் இடம் கிடைத்தது. இந்த 2 வார்டுகளிலும் பா.ஜனதா கட்சியால் அ.தி.மு.க.வின் வெற்றி பறிபோனது.
சுயேச்சை
53-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஷாதாஜ் 2,513 வாக்குள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தங்கதாமரைக்கு 1,803 ஓட்டுகள் கிடைத்தன. இவர்களது வாக்கு வித்தியாசம் 710 ஆகும். இங்கு சுயேச்சையாக போட்டியிட்ட ஜெயலட்சுமி 1,382 ஓட்டுகளுடன் 3-வது இடத்தை பிடித்தார். எனவே, சுயேச்சையால் இந்த வார்டில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. எனவே, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா நீடித்து இருந்தால் பெரும்பாலான வார்டுகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்று பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக சேலம் மாநகராட்சிக்குள் நுழைந்திருக்கும் என அரசியல் கட்சியினரின் கருத்தாக உள்ளது.
Related Tags :
Next Story