கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 25 Feb 2022 2:23 AM IST (Updated: 25 Feb 2022 2:23 AM IST)
t-max-icont-min-icon

கைதான 2 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது

சமயபுரம்
மண்ணச்சநல்லூர் காந்திநகர் 7-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் சதீஷ்குமார்(வயது 32). இவர், சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்தார். கடந்த ஜனவரி மாதம் இவரும், இவருடைய நண்பர்கள் சிலரும் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி ஏரி பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது சதீஷ்குமாரை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்து அந்த பகுதியில் உள்ள ஏரியில் வீசி விட்டு சென்றுவிட்டனர். இந்த கொலை சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா (34), சுரேஷ் என்கிற சுரேஷ் பாண்டி (31), புல்லட்ராஜா என்கிற நளராஜா (41) (இவர் மண்ணச்சநல்லூர் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பரமேஸ்வரியின் தம்பி ஆவார்) மற்றும் அரவிந்தசாமி (19), ஷேக் அப்துல்லா(45) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சதீஷ்குமாரின் தாய் அம்சவல்லியும்(63) கைது செய்யப்பட்டார். விசாரணையில், அம்சவல்லிக்கு சொந்தமான இடத்தை ரூ.1 கோடிக்கு மேல் விற்றதாகவும், அதில், ரூ.37 லட்சத்தை சதீஷ்குமாரிடம் கொடுத்ததாகவும், அந்த பணத்தை அவர் ஊதாரித்தனமாக செலவு செய்து விட்டு அம்சவல்லியிடம் மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், இதன் காரணமாக அம்சவல்லி கூலிப்படையை வைத்து சதீஷ்குமாரை கொலை செய்ததும் தெரியவந்தது. பின்னர், கைதான 6 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ராஜா மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரும் தொடர்ந்து குற்றம் செய்யக்கூடியவர்கள் என்று போலீஸ் அதிகாரிகள் பரிந்துரைத்ததன்பேரில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார். அதற்கான நகல் சிறையிலிருக்கும் இருவரிடமும் வழங்கப்பட்டது. இதேபோல, புல்லட் ராஜா மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story