நிரந்தரமாக ஆசிரியர் நியமிக்கக்கோரி பள்ளியை பூட்டி பெற்றோர்கள் போராட்டம்
நிரந்தரமாக ஆசிரியர் நியமிக்கக்கோரி பள்ளியை பூட்டி பெற்றோர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே தோட்டாக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டனி ஸ்டெல்லாபாய் என்பவர் தலைமை ஆசிரியராகவும், உலகம்மாள் என்ற உதவி ஆசிரியரும் பணியாற்றி வருகின்றனர்.
இதில் உதவி ஆசிரியை உலகம்மாள் திசையன்விளை அருகே மலையன்குடி கிராமத்தில் உள்ள பள்ளியில் பணியாற்றி வரும் நிலையில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து 5 ஆண்டுகளாக தோட்டாக்குடி பள்ளியில் மாற்று ஆசிரியராக தற்போது வரை பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் உலகம்மாள் மீண்டும் மலையன்குடி பள்ளிக்கு பணிக்குச் செல்ல உள்ளதாக கூறியும், எனவே தங்கள் பள்ளிக்கு கூடுதலாக நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் ஆகிய இருவரும் பள்ளிக்கு வந்து திறந்து உளளனர். அப்போது அங்கு திரண்டு வந்த பெற்றோர்கள், நிரந்தரமாக ஆசிரியர் நியமிக்கும் வரை பள்ளியை திறக்கக் கூடாது எனக்கூறி கதவை இழுத்துப் பூட்டினர்.
இதனால் செய்வதறியாது தவித்து போன ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்து அதிகாரிகள் விசாரணை நடத்திச் சென்றனர். இருப்பினும் பொதுமக்கள் பள்ளியை திறக்க அனுமதிக்காததால் ஆசிரியர்கள் வகுப்பறை வாசலில் அமர்ந்திருந்தனர். மேலும் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் நியமிக்கக்கோரி பெற்றோர்களே பள்ளியை இழுத்து பூட்டி போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story