உக்ரைனில் சிக்கிய கன்னடர்களை பத்திரமாக அழைத்து வர நடவடிக்கை - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
உக்ரைனில் சிக்கியுள்ள கன்னடர்களை பத்திரமாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு:
உக்ரைன் மீது போர்
உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியுள்ளது. இதனால் உக்ரைனில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இந்தியர்கள் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை மீட்க மத்திய அரசின் உதவியுடன் பத்திரமாக மீட்டுவர மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
இந்த நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள கன்னடர்களை மீட்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கன்னடர்களை மீட்க நடவடிக்கை
உக்ரைனில் போர் தொடங்கியுள்ளது. உக்ரைனில் இந்தியர்கள் குறிப்பாக கன்னடர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. அவர்களை பத்திரமாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 பஸ்களில் 100 மாணவர்கள் பயணித்துள்ளனர். அதில் கன்னடர்கள் 10 பேர் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அவர்கள் குறித்து முழுமையான தகவல்களை சேகரித்து வருகிறோம். உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.
அங்குள்ள இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான ஆலோசனைகளை இந்திய தூதரகம் வழங்கியுள்ளது. விமான சேவைகள் தொடங்கப்பட்டதும் அங்குள்ள கன்னடர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள். இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளருடன் தொடர்பில் இருக்கிறோம். மத்திய வெளியுறவுத்துறை மந்திரியுடனும் இதுகுறித்து ஆலோசிக்கப்படும்.
மாணவர்கள் குழு
உக்ரைனில் இருந்து முதற்கட்டமாக கடந்த வாரம் இந்தியர்கள் 200 பேர் அழைத்து வரப்பட்டனர். அதில் கன்னடர்கள் இல்லை. மாணவர்கள் தனித்தனி குழுவாக அழைத்து வரப்படுகிறார்கள். அதில் முதல் குழு பட்டியலில் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் இல்லை. அடுத்தடுத்து வரும் குழுக்களில் கன்னடர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story