13 லட்சம் பேருக்கு தபால்நிலையம் மூலம் ஆதார் சேவை-முதன்மை தபால்துறைத்தலைவர் பேச்சு
மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட தபால்நிலையங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 13 லட்சம் பேருக்கு ஆதார் சேவை வழங்கப்பட்டதாக தமிழக வட்ட முதன்மை தபால்துறைத்தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.
மதுரை,
மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட தபால்நிலையங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 13 லட்சம் பேருக்கு ஆதார் சேவை வழங்கப்பட்டதாக தமிழக வட்ட முதன்மை தபால்துறைத்தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.
மண்டல விருது
மதுரையில் உள்ள தென்மண்டல தபால்துறைத்தலைவர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு சிறப்பாக பணியாற்றிய பணியாளர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று மதுரையில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், தென்மண்டல தபால்துறை இயக்குனர் ரவீந்திரன் வரவேற்றார். தென்மண்டல தபால்துறைத்தலைவர் (கூடுதல் பொறுப்பு) நடராஜன் தலைமை தாங்கினார். தமிழக தபால்றை வட்டத்தின் முதன்மை தபால்துறைத்தலைவர் செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசியதாவது:-
சுதந்திரத்துக்கு முன்னர் சென்னை மாகாணமாக இருந்த போது தமிழகம், ஆந்திரம், கேரள மற்றும் கர்நாடகத்தின் ஒருசில பகுதிகளை உள்ளடக்கி தமிழக தபால்துறை வட்டம் உருவாக்கப்பட்டது. தென்னிந்தியாவில் அதிக வருமானம் மற்றும் சிறப்பான சேவை செய்யும் வட்டமாக தமிழகம் உள்ளது. தற்போது, ஆதார் சேவை, பாஸ்போர்ட் சேவை, வங்கி சேவை ஆகியவற்றை இந்த துறை வழங்கி வருகிறது. தமிழக வட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருள்களுக்கு சிறப்பு தபால் உறைகளை வெளியிட்டுள்ளது. தென்மண்டலத்தில் மட்டும் 16 பொருள்களுக்கு தபால் உறை வெளியிடப்பட்டுள்ளது.
13 லட்சம் பேருக்கு
கடந்த 2019-20, 2020-21 நிதியாண்டில் தென்மண்டலத்தில் 13 லட்சம் பேருக்கு ஆதார் சேவை வழங்கப்பட்டுள்ளது. 8 தபால்நிலைய பாஸ்போர்ட் சேவை மூலம் 70 ஆயிரம் பாஸ்போர்ட் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. செல்வமகள் திட்ட்தில் 6 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. தபால் வங்கி சேவை மூலம் 13 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு வாழ்நாள் சான்றிதழ் வீடுதேடிச்சென்று வழங்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ளும் வகையிலான திட்டங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தபால்காரர்களின் செல்போன் செயலி 80 சதவீத பலனை தந்துள்ளது. விரைவில், வீடுதேடி சென்று பார்சல்களை பெற்று அனுப்பும் திட்டம் செயல்பாட்டுக்கு வரஉள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
11 கோட்டங்கள்
முன்னதாக, சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், பணியாளர்களுக்கு தென்மண்டல விருதுகள் வழங்கப்பட்டது. இதில், உசிலம்பட்டி கொடிக்குளத்தை சேர்ந்த, நெல்லை தபால்நிலையத்தில் பணியாற்றி வரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஜெயபிரபுவுக்கு, முதன்மை தபால்துறைத்லைவர் அவரது இருக்கைக்கு சென்று விருது வழங்கினார். மதுரை கோட்டத்தில், முதுநிலை கண்காணிப்பாளர்கள் லட்சுமணன், ஜவகர் ராஜ், தலைமை தபால்நிலைய மக்கள் தொடர்பு ஆய்வாளர் மீனா, சிறப்பாக பணியாற்றிய டிரைவர்கள் வேல்முருகன், கிருஷ்ணகுமார், கன்னியாகுமரி முதுநிலை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் மற்றும் விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 11 கோட்டங்களை சேர்ந்தவர்களுக்கு சிறப்பான சேவைக்கான விருது வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மண்டல உதவி இயக்குனர் கலைவாணி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story