தொழிற்சாலைகளில் பெண்களை பணியமர்த்தும் போது விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் தொழிலக பாதுகாப்பு கூடுதல் இயக்குனர் அறிவுறுத்தல்


தொழிற்சாலைகளில்  பெண்களை பணியமர்த்தும் போது  விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் தொழிலக பாதுகாப்பு கூடுதல் இயக்குனர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 25 Feb 2022 3:02 AM IST (Updated: 25 Feb 2022 3:02 AM IST)
t-max-icont-min-icon

தொழிற்சாலைகளில் பெண்களை பணியமர்த்தும்போது சட்ட விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் இரா.ராஜசேகரன் அறிவுறுத்தினார்

நெல்லை:
தொழிற்சாலைகளில் பெண்களை பணியமர்த்தும்போது சட்ட விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் இரா.ராஜசேகரன் அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அறிவுறுத்தலின்பேரில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில், முந்திரி தொழிற்சாலைகள், கையுறை உற்பத்தி தொழிற்சாலை, மீன்வலை உற்பத்தி தொழிற்சாலை, ஆயத்த ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் நூற்பாலைகளின் மனிதவள மேலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது.
மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் இரா.ராஜசேகரன் தலைமை தாங்கினார். நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகளவில் பெண்களை பணியமர்த்தியுள்ள 90-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் இரா.ராஜசேகரன் பேசியதாவது:-
சட்ட விதிகள்
தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்களை பணியமர்த்தும்போது, தொழிற்சாலைகள் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகள், பெண் தொழிலாளர்களை விடுதிகளில் தங்க வைக்கும்போது அதற்கான விதிமுைறகள், பணியிடத்தில் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க சட்டங்களில் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
தங்கும் விடுதிகளில் அடிப்படை தேவையான குடிநீர், பிற பயன்பாடுகளுக்கான நீர், கழிப்பறை, இதர அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தங்கும் விடுதி அறைகளின் எண்ணிக்கை மற்றும் அளவுக்கேற்ப மட்டும் பெண் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட வேண்டும்.
சுகாதாரமான உணவு
தங்கும் விடுதிகளில் தகுதிவாய்ந்த பெண் வார்டன்கள் மற்றும் போதிய அளவில் பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். விடுதிகளில் வழங்கப்படும் உணவின் தரத்தை பரிசோதிப்பதுடன் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு தொழிற்சாலைகள் மற்றும் தங்கும் விடுதிகளில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க, புகார் குழு அமைக்கப்பட்டு, முறையாக செயல்படுவதை கண்காணிக்க வேண்டும்.
பெண் தொழிலாளர்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள், விடுப்பு மற்றும் இதர நல வசதிகள் முறையாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தொழிற்சாலை நிர்வாகங்களின் பங்களிப்பு அனைத்து விஷயங்களிலும் முறையாக இருந்தால் மட்டுமே எத்தகைய அசாதாரண சூழலையும் எதிர்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தங்கும் விடுதிகள்
கூட்டத்தில், நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், மாவட்ட சமூகநல அலுவலர் சரசுவதி ஆகியோர் பேசினர். அப்போது அவர்கள், தொழிற்சாலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமவாய்ப்பு கொள்கையை ஏற்படுத்தி தருதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதிக்கேற்ப பணியிடம் தேர்வு செய்து பணிவாய்ப்பு ஏற்படுத்தி தருதல் குறித்தும், பெண்களுக்கான தங்கும் விடுதிகள் குறித்த சட்டங்களில் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகள், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் சட்ட விவரங்கள் குறித்தும் விளக்கி கூறினர்.
கூட்டத்தில் நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் க.நிறைமதி, துணை இயக்குனர் த.ச.சஜின், உதவி இயக்குனர் அ.கருணாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story