தனியார் நிறுவனத்தில் போலி தங்க காசுகளை விற்றதாக 2 பேர் கைது
தனியார் நிறுவனத்தில் போலி தங்க காசுகளை விற்ற 2 பேரை கைது செய்தனர்.
பெரம்பலூர்:
போலி தங்க காசுகள்
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் மேற்கு காலனியை சேர்ந்தவர் வரதராஜன்(வயது 38). இவர் பெரம்பலூரில் உள்ள தங்க நகைகளை அடகு பெறும் தனியார் நிறுவனத்தின் கிளைக்கு கடந்த 16-ந் தேதி மாலை சென்றார். அங்கு பணியில் இருந்த உதவி மேலாளர் விஜயசாந்தியிடம், தங்க காசுகளை விற்பனை செய்வதாக கூறி 23 காசுகளை கொடுத்து ரூ.8 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுள்ளார்.
மேலும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக 3 காசுகளை இரண்டாக வெட்டி எடுத்து வந்து வரதராஜன் கொடுத்ததை நம்பி சரியாக சோதனை செய்யாமல் 23 காசுகளையும் பெற்றுக்கொண்டு அதற்குரிய பணத்தை விஜயசாந்தி கொடுத்துள்ளார். அவ்வாறு பெறப்பட்ட 23 தங்கக் காசுகளையும் பெங்களூருவில் உள்ள பிரதான நிறுவனத்திற்கு அனுப்பி அங்கு பரிசோதித்தபோது, அவை தங்க முலாம் பூசப்பட்ட போலியான காசுகள் என்பது தெரியவந்தது.
2 பேர் கைது
இந்த மோசடி சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசில் அந்நிறுவனத்தின் மேலாளர்(பொறுப்பு) பழனிச்சாமி புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் பெரம்பலூர் நகர போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வரதராஜனை அழைத்து போலீசார் விசாரித்ததில், பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தை சேர்ந்த பாலமுருகன் (30) என்பவரின் ஆலோசனையின்பேரில் தங்க முலாம் பூசப்பட்ட காசுகளை விற்பனை செய்ததாக அவர் கூறினார்.
தங்க முலாம் பூசிய காசுகளை விற்பனை செய்ததாக 2 பேரையும் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 ேபரும் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story