ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடையார்பாளையம்:
ஆக்கிரமிப்பு
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள துலாரங்குறிச்சி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதால், போக்குவரத்துக்கு பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று கூறி, ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு, திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தனியார் ஆக்கிரமிப்பு செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தால், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story