100 நாள் வேலை திட்ட பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் மறியல்


100 நாள் வேலை திட்ட பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 25 Feb 2022 3:19 AM IST (Updated: 25 Feb 2022 3:19 AM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட்ட பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

குன்னம்:

சாலை மறியல்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வயலப்பாடி கிராமத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத்திட்டம்) பணி ஒதுக்கீடு செய்யும்போது ஒரு பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு அதிக நாட்கள் பணி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், மற்றொரு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மிகக் குறைந்த நாட்களே பணி ஒதுக்கீடு செய்வதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று அரியலூர்- திட்டக்குடி சாலையில் வயலப்பாடி பஸ் நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு ஏற்றிச் செல்லும் டிராக்டர்கள் அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து பாதிப்பு
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் மற்றும் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இனிவரும் காலங்களில் பாரபட்சமின்றி பணி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், அனைவருக்கும் விரைவாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்ததை தொடர்ந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story