அடித்தட்டு மக்களின் வாழ்வு மேம்பட இலவச வீட்டுமனை பட்டா
கரூர் மாவட்டத்தில் உள்ள அடித்தட்டு மக்களின் வாழ்வு மேம்பட இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் அனைவருக்கும் இலவசமாக வீடுகள் கட்டித்தரப்படும் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
கரூர்
இலவச வீட்டுமனை பட்டாக்கள்
கரூர் மாவட்டத்தில் வேட்டமங்கலம் ஊராட்சி, குந்தாணிப்பாளையத்தில் கூடாரம் அமைத்து குடியிருந்து கொண்டு வெளியூர்களுக்கு சென்று சர்க்கஸ் நடத்துவது, கயிறு மேல் நடப்பது, கிடைத்த கூலி வேலைகளை செய்து வாழ்ந்து வரும் கலைக்கூத்தாடிகள் என்று சொல்லப்படும் டொம்பர் இன மக்கள் 94 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
தமிழக முதல்-அமைச்சர் ஏழை, எளிய அடித்தட்டு மக்கள் வாழ்வில் மேம்பாடு அடைவதற்கும், பொருளாதாரத்தில் வளம் பெறுவதற்கும் தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், வேட்டமங்கலம் ஊராட்சி, குந்தாணிப்பாளையத்தில் 94 குடும்பங்களைச் சேர்ந்த 358 நபர்கள் வசிப்பதற்கு இலவச வீட்டுமனை வழங்க முடிவெடுக்கப்பட்டு, கடந்த 11.12.2021-ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.
அடிப்படை வசதிகள்
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குப்பம் கிராமத்தில், டொம்பர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கியதால், அவர்களின் 50 ஆண்டுகால நாடோடி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்ட அனைவருக்கும் அரசின் திட்டத்தின் கீழ் இலவசமாக வீடு கட்டித்தரவும், அந்தப்பகுதியில் மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உத்தரவிட்டதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இலவசமாக வீடுகள்
இந்நிலையில், இலவச பட்டா வழங்கப்பட்டுள்ள பகுதியினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து டொம்பர் இன மக்களுடன் கலந்துரையாடினார். அவர்களின் கூடாரங்களுக்குள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் ஒரு வருடத்திற்குள் உங்கள் அனைவருக்கும் இலவசமாக வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும், அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும் எனவும், மேலும், இந்தப்பகுதியிலேயே ஆயத்த ஆடை உற்பத்தி தொழிலகம் அமைத்து அதில் உங்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், உங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல், அரசுப்பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும்.
பல்வேறு பணிகள்
குறிப்பாக பெண்குழந்தைகளை 21 வயதிற்கு முன்பு திருமணம் செய்து வைக்காமல் அவர்களை கல்லூரி வரை படிக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நான் உங்களுக்கு வைக்கின்றேன் என தெரிவித்தார்.
டொம்பர் இன மக்கள் வசிக்கும் இந்த பகுதிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் குடிநீர்க்குழாய் அமைக்கும் பணிகளும், ரூ.9.98 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கும் பணிகளும் ரூ.3.50 லட்சம் மதிப்பில் நீரேற்றும் மேட்டார் அமைக்கும் பணிகளும், தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறைகள் கட்டும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், சூரிய மின்சக்தியில் இயங்கும் தெருவிளக்குகளும் அமைத்துதரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story