சிதம்பரம் அருகே 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை
சிதம்பரம் அருகே 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே உள்ள மேல செங்கல்மேடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவில் பூசாரி கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
பின்னர் நேற்று காலையில் வந்து பார்த்தபோது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த பணத்தையும் காணவில்லை. மேலும் அம்மன் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியையும் காணவில்லை. பின்னர் இதுபற்றி கிராம முக்கியஸ்தர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோவிலை பார்வையிட்டு விசாரித்தனர்.
மேலும் 2 கோவில்கள்
விசாரணையில் நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். மேலும் அம்மன் கழுத்தில் கிடந்த தங்க சங்கலியையும் பறித்து சென்றுள்ளனர். இதேபோல் அருகில் பூங்குடி கிராமத்தில் உள்ள கருமாரியம்மன் கோவில், முருகன் கோவில் உண்டியல்களையும் உடைத்த மர்மநபர்கள் அவற்றில் இருந்த பணத்தையும், கருமாரியம்மன் கழுத்தில் கிடந்த 4 கிராம் தங்க சங்கிலியையும் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே நாள் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story