புதிதாக அமைக்கப்பட்டு ஒரு ஆண்டுக்குள் குண்டும், குழியுமாக மாறிய சாலை
வேளாங்கண்ணியில் புதிதாக அமைக்கப்பட்டு ஒரு ஆண்டுக்குள் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணியில் புதிதாக அமைக்கப்பட்டு ஒரு ஆண்டுக்குள் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாங்கண்ணி பேராலயம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்துக்கு நாள் தோறும் வெளிநாடு, வெளிமாநிலம், வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வேளாங்கண்ணி பேராலய நுழைவாயில் ஆர்ச் பகுதியில் இருந்து கடற்கரை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இங்கு புதிதாக சாலை அமைக்கப்பட்டது.
புதிதாக சாலை அமைக்கப்பட்டு ஒரு ஆண்டுக்குள் அந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் வேளாங்கண்ணிக்கு பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குண்டும், குழியுமான சாலை
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏற்கனவே குண்டும், குழியுமாக இருந்த சாலையில் பெரும்பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இந்த சாலையில் வரும் வாகனங்கள் பள்ளத்தில் இறங்காமல் இருக்க அதனை சுற்றி செல்லும்போது, எதிரே வரும் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து வேளாங்கண்ணியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நாகை மாவட்டத்தின் அடையாளமாக வேளாங்கண்ணி பேராலயம் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு புதிதாக சாலை போடப்பட்டது. தற்போது அந்த சாலை சேதமடைந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.
குறிப்பாக வேளாங்கண்ணி பஸ் நிலைய சாலை படுமோசமாக காட்சி அளிக்கிறது.பஸ் நிலையம் அருகே சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் வடிகால் வாய்க்கால் அடைக்கப்பட்டு கடலுக்கு மழைநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையின் தாழ்வான பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி பள்ளங்கள் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.
சீரமைக்க ரூ.1¼ கோடி நிதி ஒதுக்கீடு
நெடுஞ்சாலை துறை நாகை உதவி பொறியாளர் பாரதிதாசன் கூறுகையில், வேளாங்கண்ணி ஆர்ச்சில் இருந்து கடற்கரை வரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய சாலை அமைக்கப்பட்டது. தற்போது வேளாங்கண்ணி புதிய பஸ் நிலையம், கடற்கரை அருகே உள்ள பகுதிகளில் புதைவட மின்கம்பம் பதிக்கும் பணிக்காகவும், பாதாள சாக்கடைக்காகவும், குடிநீர் வடிகால் வாரியம் மூலமும் தோண்டப்பட்ட பள்ளங்களால் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. சாலை அமைக்கம் பணி அடுத்த மாதம் (மார்ச்) தொடங்கும் என்றார்.
Related Tags :
Next Story