உக்ரைனில் சிக்கி தவிக்கும் நாமக்கல் மருத்துவ மாணவர்-ஆடியோ வெளியிட்டு உருக்கம்


உக்ரைனில் சிக்கி தவிக்கும் நாமக்கல் மருத்துவ மாணவர்-ஆடியோ வெளியிட்டு உருக்கம்
x
தினத்தந்தி 25 Feb 2022 11:21 PM IST (Updated: 25 Feb 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் சிக்கி தவிக்கும் நாமக்கல் மருத்துவ மாணவர், அங்கு உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஆடியோவில் உருக்கமாக பேசியுள்ளார்.

பரமத்திவேலூர்:
உக்ரைனில் போர்
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர்தொடுத்துள்ளது. இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனில் சிக்கி தவிக்கும் தங்கள் நாட்டு மக்களை மீட்க பல்வேறு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. 
அதேபோல் இந்தியாவும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை மீட்க உதவி எண்களை அறிவித்துள்ளது. உக்ரைனில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலும் அங்கு கல்வி பயில சென்றவர்களே அதிகம். 
நாமக்கல் மாணவர் தவிப்பு
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள வேலகவுண்டம்பட்டியை சேர்ந்த சரவணன் (வயது 23) உக்ரைனில் குண்டு மழை பொழிவுக்கு இடையே சிக்கி தவித்து வருகிறார். இவர் உக்ரைன் தலைநகரான கீவ்வில் இருந்து 480 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டணிப்ரோபெட்ரோவ்ஸ்க் மருத்துவக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவருடைய தந்தை சேகர் விவசாயி ஆவார்.
இந்தநிலையில் தனது ஒரே மகனான சரவணன் உக்ரைனில் சிக்கி தவிப்பதை எண்ணி சேகர் மற்றும் அவருடைய உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர்கள் எப்படியாவது சரவணனை பத்திரமாக மீட்டு வர மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உருக்கமான ஆடியோ வெளியீடு
இதனிடையே உக்ரைனில் சிக்கி உள்ள சரவணன் தனது பெற்றோரை அவ்வப்போது செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இந்தநிலையில் நேற்று அவர் சமூகவலைத்தளம் மூலம் தங்களை மீட்கும்படி உருக்கமான ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், உக்ரைன் நாட்டில் அதிகாலையில் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டவாறு உள்ளன. அதிகாலை 4.30 மணிக்கு நாங்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் வெடி குண்டு வீசப்பட்டது. அதனை நாங்கள் பார்த்தோம். இதில் பல மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது எங்கள் பகுதியில் இருந்து பலரும் வெளியேறி வருகிறார்கள்.
என்ன செய்வதென்றே தெரியவில்லை
எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், உணவின் விலையும் அதிகரித்துள்ளது. விமானங்கள் இல்லாததால் என்ன செய்வதென்றே தெரியாமல் நாங்கள் உள்ளோம். இணையதள தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம். எந்திரங்களும் செயல்படவில்லை.
எங்கள் பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் சிக்கி தவித்து வருகிறோம். எனவே மத்திய, மாநில அரசுகள் எங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பெற்றோர் கோரிக்கை
மேலும் அவர்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் ஆகியோரை சந்தித்து, சரவணனை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர். 
அதன்பேரில் சின்ராஜ் எம்.பி., இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் உக்ரைன் நாட்டு தூதரகத்துக்கு போரின் நடுவே சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளார். 

Next Story