தாசில்தார் உள்பட 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை
பழனியில் உதவித்தொகை வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தாசில்தார் உள்பட 2 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
உதவித்தொகையில் முறைகேடு
திண்டுக்கல் மாவட்டம் பழனி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம் மூலம் கடந்த 2013-ம் ஆண்டு உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை மற்றும் சில்லறை செலவினம் ஆகியவற்றுக்கு மொத்தம் ரூ.26 லட்சத்து 93 ஆயிரத்து 495-க்கு காசோலைகள் வழங்கப்பட்டு இருந்தன. ஆனால் உதவித்தொகை வழங்கியது மற்றும் செலவுகள் செய்தவதற்கு முறையான ஆவணங்கள் அலுவலகத்தில் இல்லாததால், முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், அப்போதைய பழனி ஆர்.டி.ஓ. சுந்தரராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அப்போதைய பழனி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுப்பிரமணியபிரசாத், உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
6 ஆண்டுகள் சிறை
இதில் சுப்பிரமணியபிரசாத் திண்டுக்கல்லில் தற்போது கேபிள் டி.வி. தாசில்தாராக பணியாற்றி வருகிறார். மேலும் ராஜேந்திரன் துணை தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். இதற்கிடையே அவர்கள் மீதான வழக்கு திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்றது. மாஜிஸ்திரேட்டு கார்த்திக் வழக்கை விசாரித்தார்.
இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து, மாஜிஸ்திரேட்டு கார்த்திக் நேற்று தீர்ப்பளித்தார். அதில் தாசில்தார் சுப்பிரமணியபிரசாத் (வயது 55), ராஜேந்திரன் (65) ஆகியோருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story