மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா


மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா
x
தினத்தந்தி 26 Feb 2022 12:26 AM IST (Updated: 26 Feb 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மணவாளக்குறிச்சி:
 மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 
பகவதி அம்மன் கோவில்
குமரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிக்கொடை விழா வெகு விமர்சையாக நடைபெறும்.
அதே போல் இந்த ஆண்டுக்கான மாசிக்கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. 
கொடியேற்றம்
நாளை அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, காலை 7.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. மதியம் 1 மணிக்கு உச்சிகாலபூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை நடக்கிறது.
மார்ச் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை காலை 9.30 மணி மற்றும் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி நடைபெறுகிறது. 4-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.
ஒடுக்கு பூஜை
 7-ந்தேதி இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனியாக வரும் போது பெரிய சக்கர தீவெட்டி பவனி நடக்கிறது. 
விழாவின் கடைசி நாளான 8-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு சாஸ்தா கோவிலில் இருந்து யானை மீது களபம் பவனி, 3.30 மணிக்கு அம்மன் பவனி, 4.30 மணிக்கு அடியந்திரபூஜை, காலை 6 மணிக்கு குத்தியோட்டம், நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து திருக்கொடி இறக்கப்படுகிறது. 
இந்து சமய மாநாடு
விழா நடக்கும் 10 நாட்களும் கோவில் தங்கும் விடுதி வளாகத்தில் தனிப்பந்தலில் ராதாகிருஷ்ணபுரம் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 85-வது இந்து சமய மாநாடு நடக்கிறது. 27-ந்தேதி மாநாட்டு பந்தலில் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8.30 மணிக்கு மாநாடு கொடியேற்றம், அதைத்தொடர்ந்து நடக்கும் சமய மாநாட்டை வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரம தலைவர் சைதன்யானந்த மகராஜ் தொடங்கி வைத்து பேசுகிறார்.
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கேற்றி பேசுகிறார். மதியம் 2 மணிக்கு ஆன்மிக உரை, மாலை 4 மணிக்கு பக்தி இன்னிசை, 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு பரத நாட்டியமும் நடக்கிறது. இங்கு தினமும் பலவேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
8-ந்தேதி மாலை 4 மணிக்கு நடக்கும் நலத்திட்ட உதவி வழங்குதல் மற்றும் சமய மாநாட்டில் மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை நிர்வாகிகள் மற்றும் ஹைந்தவ சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

Next Story