ஏரியில் பிணமாக மிதந்த பள்ளி மாணவி
ஏரியில் பள்ளி மாணவி பிணமாக மிதந்தார்.
செந்துறை:
பள்ளி மாணவி
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள். இதில் இரண்டாவது மகள் காவியா(வயது 16). இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் கடந்த ஒரு வாரமாக வீட்டில் மன உளைச்சலுடன் அவர் இருந்ததாக தெரிகிறது. இவர் நேற்று முன்தினம் மாலை சிறுகடம்பூர் ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தார். பின்னர் இரவு நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு வராததை அறிந்த பெற்றோர், அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
போலீசார் விசாரணை
இந்நிலையில் நேற்று காலை சிறுகடம்பூர் ஏரியில் பெண் பிணம் மிதப்பதை கண்ட கிராம மக்கள், உடலை மீட்டு பார்த்தபோது பிணமாக மிதந்தது காவியா என்பது தெரியவந்தது. இதனைக் கண்ட உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்த புகாரின்பேரில் இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து காவியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி மன உளைச்சலால் ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குளிக்க சென்றபோது மூழ்கி இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி ஏரியில் பிணமாக மிதந்த சம்பவம் சிறுகடம்பூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story